read the tamil Special news and tips on Experts. Archive for 04/11/14
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’

நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’
இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!
ஜெ.பாரதி,  படங்கள்: ச.வெங்கடேசன்
'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்!
தம்பதியிடம் பேச்சு கொடுத்தால்... வார்த்தைக்கு வார்த்தை பொங்கி வழிகிறது நேசம்!
''30 வருஷத்துக்கு முன்ன 'ஹோட்டல் ஏலகிரி’ங்கற பேர்ல இந்த சைவ உணவகத்தை இங்க ஆரம்பிச்சோம். ஜோலார்பேட்டை பெரிய ரயில்வே ஜங்ஷனா இருக்கறதால... வெவ்வேறு ஊர்கள்ல இருந்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள்னு பராமரிக்க முடியாத நிலையில இருக்கறவங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டுட்டுப் போயிடுவாங்க. இப்படி வர்றவங்கெல்லாம் சாப்பாட்டுக்காக அலையற அலைச்சல்... கொடுமையிலும் கொடுமை! அதேபோல, ஹோட்டலுக்கு வந்துட்டாலும்... பண வசதி இல்லாத பலரும் அரை வயிறு, கால் வயிறுனு சாப்பிட்டுட்டு எழுந்து போறதைப் பார்க்கறப்ப வருத்தமா இருக்கும்.
இதெல்லாம் எங்களை ரொம்ப நாளா உறுத்திட்டே இருக்கவே... மனசுக்குள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். காலை 8 மணி முதல் 11 மணி வரை முதியவர்கள் 100 பேருக்கு இலவச உணவு, அதிக வருமானம் இல்லாத துப்புரவுத் தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் இவங்களுக்கெல்லாம் பாதி விலையில் உணவுனு முடிவு பண்ணி, உடனடியா செயல்படுத்தவும் ஆரம்பிச்சோம். அதேபோல, சீருடை, புத்தகப்பையோட வர்ற மாணவர்களுக்கும் பாதி விலையிலயே கொடுத்தோம். இவங்கள்லாம் வயிறார சாப்பிட்டு எழுந்து போறத பார்க்கும்போதே... மனசுக்கு சந்தோஷமா இருக்கும்'' என்று சொல்லும் சுஜாதா தம்பதி, தினமும் குறைந்தது 20 - 30 மாணவர்களுக்கு பேனா அல்லது பென்சில்... ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பால் என்று வழங்கிவருகிறார்கள்.
''பொதுவா, மனநிலை பாதிக்கப்பட்டவங்க... பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடைகளைக் கடந்து போறப்ப... நிக்க மாட்டாங்க. ஆனா, டீக்கடை, ஹோட்டல்னு பார்த்துட்டா... நின்னுடுவாங்க. சுயநினைவு இல்லைனாலும், சாப்பாட்டோட தேவை அவங்களுக்கு நல்லாவே தெரியுறதுதான் காரணம். ஆனா, அதை பூர்த்தி செய்துக்கற வழிதான் தெரியாது. அதனால, தினமும் காலையில சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துட்டு போய், ரயில்வே ஜங்ஷனுக்குள்ள இப்படிப்பட்ட ஆளுங்கள தேடித்தேடி கொடுத்துவிட்டு வருவேன்'' என்று நாகராஜ் சொன்னபோது, வியப்பில் விழிகள் அசையவில்லை நமக்கு.
''சொந்த ஊர் ஏலகிரி மலை. சிறு வயதிலிருந்தே ஹோட்டல்ல வேலை செய்துட்டிருந்த அனுபவத்துலதான் இந்த ஹோட்டலையே ஆரம்பிச்சேன். எங்களுக்கு மூணு குழந்தைங்க... ஸ்கூல்ல எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறாங்க. இதுவரைக்கும் எங்களுக்குனு சொந்த வீடு இல்லை, வங்கியில் எந்த சேமிப்பும் இல்லை. சுஜாதாவோட காதுல கால் சவரன் நகையும், மூக்குத்தியும்தான் போட்டிருக்காங்க. இதை எல்லாம் பார்த்து... உறவுக்காரங்க, ஊர்க்காரங்க பலரும் 'ஏமாளி’, 'பொழைக்கத் தெரியாதவங்க’னு சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் காது கொடுக்கவே மாட்டோம். பணத்தை சேர்க்கறதுல கிடைக்குற சந்தோஷத்தைவிட, பலரை பசியாத்துறதுல உள்ள ஆத்ம திருப்தி... அவங்களுக்கெல்லாம் தெரியாதே'' என்ற நாகராஜ்,
''சுஜாதா எனக்கு மனைவியா வாய்ச்சது... என்னோட வரம். அவங்களும் எல்லாரையும்போல இருந்திருந்தா... எனக்கு இது சாத்தியமாகியிருக்காது. என் அலைவரிசையிலயே அவங்களும் இருக்கறதாலதான்... 25 வருஷமா என்னால இந்தப் பயணத்தைத் தொடர முடியுது'' என்று நிறுத்த, புன்னகையுடன் தொடர்ந்தார் சுஜாதா.
''இந்தத் தொழில்ல வர்ற லாபத்துல தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை சேவைக்காக செலவு செய்றோம். எங்ககிட்ட இப்போ 15 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் சம்பளம் போக, தினமும் 4,000 ரூபாய் வரும். இதுல சலுகைகள், இலவசங்கள்னு செலவழிச்சது போக... 750 ரூபாய் மிச்சமாகும். இது எங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கு. இந்த 750 ரூபாயையும்கூட ஓட்டல்ல இருந்து எடுக்கக்கூடாது... ஏதாச்சும் வேலைக்கு போகணும்'னு தீர்மானிச்சுருக்கேன். அதனால, வி.ஏ.ஓ தேர்வுக்குப் படிச்சுட்டிருக்கேன். எனக்கு வேலை கிடைச்சுட்டா... என் சம்பளமே குடும்பச் செலவைப் பார்த்துக்க போதுமானதா இருக்குமே. அதுக்குப் பிறகு, இந்த ஹோட்டலை முழுக்க முழுக்க சேவைக்காகவே நடத்த ஆரம்பிச்சுடுவோம்'' என்ற சுஜாதா, கையில் அட்சயபாத்திரத்துடன் நிற்பது போலிருந்தது நம் கண்களுக்கு!
''இப்படி நாங்க சேவை செய்றது தெரிஞ்சு, நாங்களும் உதவி செய்றோம்னு பலரும் வர்றாங்க. ஆனா, எங்க சொந்த உழைப்பால மட்டுமே இதை செய்யணும்னு நினைக்கிறோம். அதனால, அப்படி வந்த உதவிகளையெல்லாம் அன்போட மறுத்துட்டோம். எங்களால முடிஞ்சவரை தொடர்வோம். அதுக்கான உடல் பலத்தையும், ஆரோக்கியமான மனதையும் மட்டும் ஆண்டவன் கொடுத்தா போதும்!'' என்று வைராக்கியத்தோடு நாகராஜ் சொல்ல, தலையசைத்து ஆமோதிக்கிறார் சுஜாதா!

''தினமும் வயிறு நிறையுதுக்கா!''
அருகிலேயே ரயில்வே ஜங்ஷன் இருப்பதால்... ஆட்டோ டிரைவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என்று காலை ஐந்து மணி முதலே பரபரப்புதான். சவாரியை முடித்துவிட்டு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட உட்கார்ந்திருந்த ஆட்டோ டிரைவர் சங்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது... ''காலையில சவாரிக்கு போனா... அது முடியறதுக்கு பத்தரை ஆகிடும். அதுவரைக்கும் சாப்பிட முடியாது. சவாரி முடிச்சுட்டு வர்றப்ப காலை சாப்பாடு பல ஹோட்டல்கள்ல தீர்ந்துருக்கும். அப்படியே கிடைச்சாலும் ரேட் அதிகமா இருக்கும். ஆனா, இங்க வந்தா... கட்டாயம் வயிறார சாப்பிடலாம். மத்த ஹோட்டல்ல நாற்பது ரூபாய்க்கு சாப்பிடுற சாப்பாட்டை... அதே தரம் மாறாம இங்க இருபது ரூபாய்க்கு எங்களுக்காக கொடுப்பாரு நாகராஜ் அண்ணன். கையில காசில்லன்னாகூட... சாப்பாடு போட்டுதான் அனுப்புவார்'' என்றார் பெருமிதத்துடன்!
சுகுமார், மணி... இருவரும் அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ''காலையில அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்கு போயிடுவாங்கக்கா. அதனால என்னிக்காவதுதான் காலை சாப்பாடே சாப்பிடுவோம். ஆனா, இந்த அண்ணன் ஹோட்டலுக்கு வர ஆரம்பிச்சதுல இருந்து... தினமும் வயிறு நிறைஞ்சுருதுக்கா. நாலு இட்லி, அஞ்சு ரூபாய்னு கொடுக்கறதால... இப்போலாம் வீட்டுல சாப்பிடறதே இல்ல. மதிய சாப்பாட்டை ஸ்கூல்ல சாப்பிட்டுப்போம். நைட் மட்டும்தான் அம்மா சமைப்பாங்கக்கா'’ என்றனர்.

0 comments:

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த் சிங்!

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த் சிங்!
இப்போதுதான் குஷ்வந்த்சிங்கைப் பற்றி எழுதினோம். இந்த வாரம் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும் வித்தியாசமான பெர்சனாலிட்டியுமான குஷ்வந்த்சிங் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...
''எதை மிகவும் மிஸ் செய்வீர்கள்?''
''செக்ஸை. அதை ஏற்கெனவே பல காலமாக மிஸ் செய்துவிட்டேன். ஆனால், அதைப்பற்றி நான் இப்போதும் கற்பனை செய்கிறேன்'' தன் வாழ்வின் அந்திமக் காலத்திலும் செக்ஸ் குறித்து மனதில் பட்ட கருத்துகளை இப்படி 'பொளேர்’ என வார்த்தைகளாக்கி வீசும் தைரியம் குஷ்வந்த்சிங்குக்கே உண்டு.
ஒரிஜினல் பெயர் குஷால் ஷோபா சிங். பெயரிலேயே குஷால் இருப்பத£ல், விடலைப் பருவத்தில் எல்லோரும் 'லேடி நேம்’ என்று கிண்டல் செய்ய தன் பெயரைத் தானே குஷ்வந்த்சிங் என மாற்றிக்கொண்டார்.
'சிங் இஸ் கிங்’ என்ற ரைமிங் பன்ச் குஷ்வந்த் சிங்குக்கே பொருந்தும். ஓர் அட்டகாச உதாரணம். லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் குஷ்வந்த்சிங் வேலை பார்த்தபோது ஓர் இந்திய சமஸ்தானத்தின் ராணி இறந்து போனார். அந்த ராணி தன்னை எரியூட்டும்போது, தான் புடவை அணிந்திருக்க வேண்டும் என்று தன் இறுதி ஆசையைச் சொல்லி இருந்தார். கென்யாவைச் சேர்ந்த மயானப் பணியாளர்கள் சிங்கிடம் வந்து, ''எப்படிப் புடவை கட்ட வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''மன்னிக்கவும், எனக்குப் புடவையை அவிழ்க்க மட்டும்தான் தெரியும்'' என்று சொல்லி இருக்கிறார் குறும்போடு. அவர்கள் கடுப்பாகி அப்போதைய ஹை கமிஷனர் கிருஷ்ணன் மேனனிடம் அதைப்பற்றி புகார் சொல்ல, 'அவர் அப்படித்தான்’ என பதில் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு?
நேரு குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து விமர்சித்தும் வந்திருக்கிறார். ''இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் கொண்டுவந்த எமர்ஜென்சியை நான் ஆதரித்தேன். அதை இப்போதும் நான் தவறாகக் கருதவில்லை. நாட்டின் சில முக்கியமான குறைகளைக் களைய அந்த அவசரகால நிலை நிச்சயம் உதவியது. சஞ்சய் காந்தி சொல்வதைச் செய்பவர். அவர் மனசாட்சிப்படி செயல்பட்டவர். நாட்டை உடனடியாக அப்படியே மாற்றிப் போட வேண்டும் என்று அவசரப்பட்டவர். அவரிடம் பொறுமை மட்டும்தான் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயமாக்கி அமல்படுத்த முயன்றது, குடிசைகளை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது என்று அராஜகச் செயல்களை அவர் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், நாட்டை மாற்ற வேண்டும் என்ற அதீத ஆர்வத் தில் அவர் செய்த செயல்கள்தான் அவை. சஞ்சய் எனக்கு நெருக்கமானவராக இருந்தார், எனக்கு நிறைய உதவிகள் செய்தார், பிர்லாவிடம் பேசி என்னை ஹிந்துஸ் தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக நியமிக்கவைத்தார். என்னை ராஜ்யசபா எம்.பி-யாக்கினார் என்பதற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது. ஆனால், அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை.
ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரை ஒரு ஸ்கவுட் பாய் மாதிரிதான். அவர் ஒரு தலைவரே அல்ல. சஞ்சய் போல பல பரிமாணம்கொண்ட நபரும் அல்ல. அவருக்கு அரசியலும் வரவில்லை, எதுவும் தெரியவில்லை. தனது தாயின் வழியில் நடந்தார். அதே பாணியில் பல தவறுகளையும் செய்தார். ஷா பானு வழக்கு, பாபர் மசூதி விவகாரங்களை மிகத் தவறாகக் கையாண்டார். அவர் செய்த தவறுகளின் விளைவுகள் மிக மிக மோசமானவை, நீண்ட காலம் நாட்டைப் பாதித்தவை. சஞ்சயின் மனைவியான மேனகா காந்தியும் ஒரு மட்டமான அரசியல்வாதிதான். அவரும் அவரது குடும்பமும் என்னை அவர்களுக்கு வசதியாகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசியவர்கள். மேனகாவின் மகன் வருண் வளர்க்கப்பட்ட விதமே சரியில்லை. அவரைப் போன்ற ஒரு நபருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதே தவறு. இதை அவர் சார்ந்துள்ள கட்சி உணர வேண்டும். அவரைத் தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும். வளர்ப்பு சரியில்லாத வருண் போன்றவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானவர்கள். ஆனால், ராகுல் காந்தி பரவாயில்லை. தனது தந்தை ராஜீவை விட நல்ல திறமைசாலியாக, புத்திசாலியாகவே இருக்கிறார். அவருக்கும் நல்ல தீர்க்கதரிசனம் இருக்கிறது. இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த பிரதமர்களிலேயே மிகச் சிறந்தவர் மன்மோகன் சிங் என்பது என் கருத்து. நேருவை விட இவரை சிறந்த பிரதமராக நான் கருதுகிறேன்'' இப்படி பகிரங்கமாக நேரு குடும்பத்தைப் பற்றிய கருத்துகளை முன்வைத்தவர் குஷ்வந்த்சிங்.
''இறந்த பிறகு எப்படி தாங்கள் நினைக்கப்பட வேண்டும்?'' -இப்படி ஒரு கேள்வி ஒரு பேட்டியின்போது கேட்கப்பட்டது.
''விளைவுகளைப் பற்றிக் கவலையேபடாமல் மனதில் பட்டதைப் பேசிய ஒரு மனிதனாக'' என்று பதில் அளித்தார். அதுதான் குஷ்வந்த்சிங்!
குஷ்வந்த்சிங் பத்திரிக்கையாளராக ஜொலித்தாலும் இலக்கியத் துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பு பெரிது. இந்தியாவின் உயரிய விருதான 'பத்மவிபூஷன்’ விருதினைப் பெற்றவர். லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்றவர், 1947-ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடர்ந்தார். அதன் பின் எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், தன்னுடைய முதல் நாவலை 'மனோ மஜ்ரா’ என்ற பெயரில் எழுதினார். 'கரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு மனோ மஜ்ராவை அனுப்பிவைத்தார். அந்தப் போட்டியில், பரிசை வென்ற அந்த நூல் பிறகு, 'பாகிஸ்தான் போகும் ரயில்’ (கி ஜிக்ஷீணீவீஸீ tஷீ றிணீளீவீstணீஸீ’) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த படைப்பு அது. 'தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ், 'தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்’, 'தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’, 'ஐ ஷல் நாட் ஹியர் த நைட்டிங்கேல், தி ஃபால் ஆஃப் பஞ்சாப், ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்’, 'எண்டு ஆஃப் இந்தியா’, 'தில்லி’ என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.
1957-ல் யோஜனா (தமிழில் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை 'இந்தியா இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ என்ற பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பத்திரிக்கையின் சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் 'வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்’ சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒரே நேரத்தில் வாரிக் குவித்தது.
தன் எழுத்தில் பாலியல் விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் பேசிய குஷ்வந்த்சிங்கிற்கு எதிராகவும் குரல்கள் ஒலிக்காமல் இல்லை. 'குஷ்வந்த் சிங் இனிமேல் எழுதக் கூடாது. அவருடைய எழுத்துக்குக் கட்டுப்பாடும் சென்சாரும் தேவை’ என்று சொன்னார்கள் சிலர். அப்போது சிங் அளித்த பதில் என்ன தெரியுமா? ''பேனாவுக்கான ஆணுறையை யாரும் கண்டுபிடிக்கவில்லை!''

''அப்பா உங்களுக்கு இருட்டைக் கண்டால் பயமா?'' குழந்தை கேட்டது.
''இல்லையே... யார் சொன்னார்கள்? எனக்கு இருட்டைக் கண்டால் பயமென்று?'' அப்பா சொன்னார்.
''பின்னே நீங்கள் ஏன் அம்மாவின் படுக்கையில் ஏறி அவளுடைய போர்வைக்குள் புகுந்துகொள்கிறீர்கள்?''
சிலையானார் அப்பா. குழந்தை மறுபடியும் கேட்டது.
ஒரு நடிகையிடம் பத்திரிகை நிருபர், ''நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அந்த நடிகை, ''நான் என் அம்மாவின் காலடித் தடத்தில் நடக்க விரும்புகிறேன். அவளைப்போல் வாழ்நாள் முழுதும் சிங்கிளாக வாழ விரும்புகிறேன்'' என்றாளாம்.
சீக்கியர்களை அவர் அளவுக்கு யாரும் கிண்டல் அடித்ததில்லை. இதோ...
ஓர் அமெரிக்கர், ஒரு ரஷ்யர், ஒரு சர்தார்ஜி என மூன்று பேர் 'லை- டிடெக்டர்’ எனப்படும் உண்மை கண்டறியும் கருவிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
''நான் 20 பீரை ஒரே நேரத்தில் குடிப்பேன்'' என்றாராம் அமெரிக்கர். அந்த லை-டிடெக்டர் கருவி 'நோ’ என சிவப்பு விளக்கின் ஒளியை உமிழ்ந்தது. உடனே எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல பச்சை விளக்கு எரிந்தது. அடுத்து ரஷ்யர், ''நான் 10 பர்கரை ஒரே வாயில் தின்பேன்'' என்றாராம். வழக்கம்போல சிவப்பு ஒளிர பயந்து போன ரஷ்யர், '' இல்லை இல்லை... ஐந்து பர்கரைத் தின்பேன்’ என்றதும் பச்சை விளக்கு ஒளிர்ந்தது. இறுதியாக சர்தார்ஜியின் முறையும் வந்தது.
சர்தார்ஜி தொண்டயைச் செருமியபடி, ''நான் நினைக்கிறேன்...'' என ஆரம்பித்தாராம். சிவப்பு விளக்கு உடனே ஒளிர ஆரம்பித்ததாம்!
- ஆர்.சரண்

0 comments:

வேலைவாய்ப்புத் திறன்... பின்தங்கும் தமிழகம்!

வேலைவாய்ப்புத் திறன்... பின்தங்கும் தமிழகம்!
சே.புகழரசி
வேலைவாய்ப்புத் திறனில் தென் இந்தியர்களைவிட வட மாநிலத்தினர் முன்னணியில் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவல், ஆய்வறிக்கை ஒன்றில் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது, எந்தெந்த மாநிலங்களில் எந்தத் துறை நன்றாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து, பீப்பிள்ஸ்ட்ராங்க், வீபாக்ஸ் ஆகிய மனிதவள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சிஐஐ-யுடன் இணைந்து, ஓர் ஆய்வறிக்கையை கூட்டாக வெளியிட்டுள்ளன. இதில் சொல்லப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில், வட மாநிலங்களில் படித்த பட்டதாரிகள்தான் தென் மாநிலங்களில் அதிக அளவில் வேலையில் உள்ளனர் என்றும், தென் மாநிலங்களில் படித்துவரும் கல்லூரி மாணவர்களின் வேலை செய்யும் திறன் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருப்பதுதான்.
இது உண்மையா?, ஆம் எனில் இதற்கு என்ன காரணம்?, இதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்கிற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை.
'கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்களில் சுமார் 34 சதவிகிதம்பேர்தான் வேலைக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இந்த சராசரியைவிட சில குறிப்பிட்ட துறை மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு அதிக தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, பி.பார்ம் (55%), பொறியியல் (52%), ஐ.டி.ஐ.கள் (47%) முடித்தவர்களிடம் வேலை செய்யும் திறன் இருக்கிறது. அதேநேரத்தில், பி.ஏ (19%), பாலிடெக்னிக் (12%) படித்த மாணவர்கள், வேலைக்கான தகுதியை மிகக் குறைவாக பெற்றிருப்பதாக இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிகிறது.
மேலும், வேலைக்கான தகுதி பெறுவதில் ஆண்களைவிட பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள். பெண்கள் 42 சதவிகிதமும், ஆண்கள் 33 சதவிகிதமும் வேலைக்கான தகுதியை பெற்றிருக்கிறார்கள். வேலை பார்க்கும் ஊரை தேர்வு செய்வதில் ஆண்கள் டெல்லியையும், பெண்கள் சென்னையையும் அதிகமாக விரும்புகிறார்கள்.  
கணிதம், ஆங்கிலம், கணினி, துறை சார்ந்த அறிவு மற்றும் வேலையில் நடந்துகொள்ளும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்களின் வேலை திறன் பரிசோதிக்கப்பட்டதில் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டி ருக்கிறது.
அனைத்துப் பிரிவுகளிலும் அதிக வேலைவாய்ப்புத் திறன்கொண்ட மாணவர்களில் புதுச்சேரி முன்னணி யில் இருக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரி மாணவர்கள் இந்த வேலைவாய்ப்புத் திறன் சோதனையில் 60 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய அளவில் அதிகளவு வேலைவாய்ப்புத் திறன் கொண்ட மாணவர்கள் இருக்கும் மாநிலங்களில் முதல் ஐந்து இடத்தில் வட மாநிலங்கள் தான் உள்ளன. இதில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன. தொழில் வளர்ச்சி குறைவாக இருக்கும் மேற்கு வங்காளம்கூட தென்மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பது இன்னொரு ஆச்சர்யம்.  
தென்மாநிலங்களிலும் ஆந்திரா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாகத்தான் நம் தமிழகம் வருவது இன்னொரு பெரிய அதிர்ச்சி.  
எந்த மாநில மாணவர்கள் எந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புத் திறனை பெற்றிருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
மஹாராஷ்ட்ரா மாணவர்கள் வங்கி மற்றும் நிதிச் சேவையிலும், டெல்லி மாணவர்கள் சுற்றுலா மற்றும் மருத்துவத் துறையிலும், குஜராத் மாநில மாணவர்கள் பொறியியல் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும், தமிழ்நாட்டு மாணவர்கள் உற்பத்தித் துறையிலும் வேலைவாய்ப்புத் திறனை கூடுதலாக பெற்றிருக்கிறார்கள். பி.பி.ஓ மற்றும் ஐ.டி துறைகளில் கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில மாணவர்களும் முக்கியப் பங்காற்றுகிறார்கள். பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் கர்நாடகா மாணவர்கள் திறமையோடு இருக்கிறார்கள்.  
உற்பத்தி துறையில் மாணவர்கள் கூடுதல் வேலைவாய்ப்புத் திறனை ஏன் பெற்றிருக்கிறார்கள், மற்ற துறைகளில் வேலை வாய்ப்புத்திறன் குறைந்திருக்கிறது? மேலும், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? என டீம் லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மூத்த துணைத் தலைவர் ரிதுபர்ண சக்ரபர்த்தியிடம் கேட்டோம்.
'' உற்பத்தி நிறுவனங்கள் அமைவதற் கென சில காரணிகள் இருக்க வேண்டும். அதில் நிறுவனங்கள் அமைவதற்கென புறநகர் பகுதிகளில் இட வசதி, தண்ணீர் போன்றவை சாதமாக இருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த அறிவு, சிறப்பு சலுகைகள் (அரசு சார்பில் அளிக்கப்படும் மானியம், வட்டி சலுகைகள், மின்சார கட்டண சலுகைகள்) போன்ற மூன்று காரணிகள் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். இது தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் பல உற்பத்தி நிறுவனங்களை காண முடிகிறது. இதுபோன்ற சில காரணிகளால் தமிழ்நாடு உற்பத்தி துறையில் கூடுதல் வேலை வாய்ப்பையும், துறை சார்ந்த கூடுதல் வேலைத்திறனை பெற காரணி களாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அவுட்லுக்!
தமிழகத்தைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பில் உடனடி மாற்றம் ஏதும் இருக்காது. 2015-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை நன்றாக இருக்கலாம். மேலும், ஐ.டி துறை தமிழ்நாட்டுக்குள்ளேயே வளர்ச்சியடையலாம்''.  
வேலைவாய்ப்புத் திறனில் வடமாநில மாணவர்களைவிட தென்மாநில மாணவர்கள் பின்தங்கி இருப்பது ஏன் என்கிற கேள்வியை சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனமான காம்ஃபை சொல்யூஷன் மனிதவள ஆலோசனை  நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே. சுகுமாரனிடம் கேட்டோம்.
''ஐ.டி துறையில் மட்டுமல்ல, கட்டுமானத் துறை, ஹாஸ்பிட்டல், சில்லறை மற்றும் மெக்கானிக்கல் என அனைத்து துறைகளிலும் வடமாநில ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகி உள்ளது. இதற்கு காரணம், சில வருடங்களுக்குமுன் அனைத்துத் துறைகளும் தமிழ்நாட்டில் ஏற்றம் அடைந்தன.
அப்போது ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவே, அதனை ஈடுகட்ட வடமாநிலத்தினர் அதிக அளவில் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்தத் தேவையை பயன்படுத்தி அங்குள்ள மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்துக்கொண்டனர். இந்தப் போக்குதான் இப்போதும் தொடர்கிறது.  
அதேநேரத்தில், ஐ.டி துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலுள்ள முதல் 30 இடங் களிலுள்ள கல்லூரிகள் மற்றும் இந்தியாவிலுள்ள மற்ற முன்னணி கல்லூரிகளில் இருந்தும் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கின்றன'' என்றவர், இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பற்றியும் சொன்னார்.  
''கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகத் தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் ஐ.டி துறை சார்ந்த பாடப் பிரிவுகளில் மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு ஐ.டி துறையில் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு எனப் பல காரணங்கள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 33,505 இடங்களில் வெறும் 15,684 இடங்கள் மட்டுமே நிரம்பின. தற்போதுள்ள நிலையில், ஐ.டி துறையில் கல்லூரிப் படிப்பை முடித்து புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் இன்றளவும் கல்லூரிகளை முடித்து வெளியேவரும் மாணவர்களைத் தேர்வு செய்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழக மாணவர்களின் ஐ.டி துறை சார்ந்த இந்த ஆர்வக்குறைவால், பல நிறுவனங்கள் வடமாநில மாணவர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது'' என்றவர், மற்றொரு முக்கியமான காரணத்தையும் குறிப்பிட்டார்.
''பல நிறுவனங்கள் வடமாநில ஊழியர்களைத் தேர்தெடுக்க மொழியும் ஒரு காரணம். உதாரணத்துக்கு, ஐ.டி துறை சார்ந்த கால்சென்டர்களில் அவர்களுடைய தேவைக்கேற்ப, இந்தி மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகள் தெரிந்தவர்களை மட்டும் எடுக்கக்கூடிய சூழலில், அந்த மொழிகளை நன்கு தெரிந்தவர்களையே எடுக்கிறார்கள்.
பொதுவாக, எந்த நிறுவனமாக இருந்தாலும் வடமாநிலம், தென்மாநிலம் என்று பார்த்து வேலைக்கு எடுப்பதில்லை. திறமைக்கும் தகுதிக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த நிலையைப்போக்க தமிழக மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க கல்லூரிகளில் படிக்கும்போதே, மாணவர்கள் தங்களிடமுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களைப் புரிந்துகொண்டு, நிறுவனங்களின் தொழில்நுட்ப தேவைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவர்கள் எந்த மாற்றத்தையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் நல்லதொரு வேலைவாய்ப்பை பெற முடியும். இன்றைய நிலையில் உள்ள போட்டியை சமாளிக்க மாணவர்களுக்கு உள்ள சிறந்த வழி நிறுவனங்களுக்கு ஏற்ப தங்களது திறமையை வளர்த்துக்கொள்வதே'' என்றார் சுகுமாறன்.
இன்றைக்கு வேலைவாய்ப்பு என்பது அடிப்படையான விஷயமாக மாறிவிட்டதால், வேலைவாய்ப்புக்கேற்ப தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதைத் தவிர, நமது இளைஞர்களுக்கு வேறுவழி இல்லை!

0 comments:

இரண்டு கோடி ரூபாய் கமிசன் மோசடி!!

இரண்டு கோடி ரூபாய்  கமிசன் மோசடி!! .....அப்டியா எங்கனு தெரியனுமா 

இங்கதான் பக்கத்துல அமெரிக்கால இல்லங்க ..நம்ம ஊரு செனனை ஆவடில தானுங்க 

அதாவது சமிபத்தில் ஆவடில  15 ஏக்கர்   நிலம் கைமாறி  இருக்கிறது  குறைந்த விலைக்கு  வந்கிதருவத்தால்  வாங்கித்தரும் ஏஜெண்டுகளுக்கு  பேசபட்ட 
கமிஷன் தொகை இரண்டு கோடி !

அதாவது சுமார் 30 கோடி  போகும் நிலத்தினை  8கோடிக்கு குறைந்த விலைக்கு வங்கி தருவதால்  அந்த ஏஜெண்டுகளுக்கு இந்த கமிசன் பேசப்பட்ட து

இதற்காக அவர்கள் கடந்த இரண்டுவருடமஹா கஷ்டப்பட்டு உள்ளார்கள் 
அநதநிலம் கோர்ட் வழக்கில் இருத்தால் 
வாங்கும் தரப்பு எங்களுக்கு குறைந்த விலைக்கு வாங்கி தாருங்கள் நங்கள் 

உங்களுக்கு பேசியபடி இரண்டு கோடி  தருவதாஹா  சொல்லிசத்தியம் செய்து இருக்கிறார்கள்
 அனால் பேசியபடி கமிசின் தராமல் ஏமாற்றி விற்றார்கள்

ஐயோ பாவம் அந்த ஏஜெண்டுகள் கடைசியில் போராட்டம் கொடிபிடி 

பஞ்சயத்து  என்று அலைந்து  கடைசியில்  சில லட்சங்கள்  மட்டும்  வாங்கி

இருக்கிறார்கள்  இப்படித்தான் இருக்கு நம்ம ஊருல தரகர் களின் நிலை 

இந்த நில தரகர்கள் படும் பாடு இருக்கே ! ... கடவுளுக்குத்தான் வெளிச்சம் 

அபுதாகிர் 






0 comments: