read the tamil Special news and tips on Experts. Archive for 12/24/13
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

எனி டைம் மர்டர்!

பெங்களூருவின் பரபரப்பான உல்சூர் சாலையில் இயங் கும் ஏ.டி.எம். மையத்தில் நடைபெற்ற பயங்கரம், நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.டி.எம். என்பதற்கு, எனி டைம் மர்டர் என்று புது அர்த்தம் வந்துவிடுமோ என்று பதைபதைக்கிறார்கள் மக்கள். 
பெங்களூருவில் வசிப் பவர் தனியார் வங்கி கிளை மேலாளர் ஜோதி உதய். கடந்த 19-ம் தேதி, உல்சூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக் கச் சென்றார். அப்போது, சாவகாசமாக உள்ளே நுழைந்த ஒருவன், ஏ.டி.எம். மையத்தின் கதவை இழுத்து மூடியுள்ளான். வெகுநேரம் கழித்து, ஏ.டி.எம். உள்ளே பணம் எடுக்க நுழைந்தவர்கள் ஜோதி உதய் வெட்டுப்பட்டு ரத்தக் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்து பதறி போலீஸுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதி வான காட்சிகளைப் பார்த்த போலீஸாருக்கு இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.
ஆடு வெட்டப் பயன்படுத்தும் பயங்கரமான அரிவாளுடன் உள்ளே நுழைந்த அந்த ஆசாமி, ஜோதி உதய்யை சரமாரியாக வெட்டுகிறான். அவ னிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கும் இங்கும் ஓடுகிறார். ஆனால், கதவு மூடப்பட்டு இருப்பதால், அவரால் தப்பிக்க முடியவில்லை. சரமாரியாக வெட்டிவிட்டு, மிகவும் நிதானமாக அரிவாளில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்துவிட்டு வெளியேறுகிறான். அந்தக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளி யாக... இந்தியா முழுக்க உள்ள அனைவரும் திகிலில் உறைந்தனர்.
வளர்ச்சியடைந்த ஒரு மாநிலத்தின் தலைநகரில், பரபரப்பான வீதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் சர்வ சாதாரணமாக ஒரு கொடூரச் செயலைச் செய்துவிட்டு ஒருவனால் வெளியேற முடிகிறது என்றால், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தெருக்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் ஏ.டி.எம்-களின் பாதுகாப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு தூக்கம் தொலைத்த கர்நாடக அரசு, செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூடியுள்ளது. தனிப்படைகளை அமைத்து குற்ற வாளியைத் தேடிவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாது காப்பு ஏற்பாடுகள் எந்த லட்சணத்தில் உள்ளது என்று அலசினோம்.
தமிழகத்தின் தலைநகரில் ஆரம்பித்து கடைக்கோடி கிராமங்கள் வரை உள்ள ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள் ளன. காவலாளியும் இல்லாத, கதவுகளும் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் சென்னை நகரிலேயே உள்ளன. காவலாளி உள்ள ஒருசில ஏ.டி.எம். மையங்களிலும் அவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக செயல்படுவது இல்லை. 65 வயதைக் கடந்த அவர்கள், பகலிலேயே வாசலில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். பல ஏ.டி.எம். மையங்கள் இரவு நேர பார் ஆகத்தான் செயல்படுகின்றன. பல இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்படவே இல்லை. பெரும்பாலானவற்றில் பொருத்தப்பட்ட கேம ராக்களும் செயல்படுவது இல்லை.  
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றியும், காவல் துறை மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.  
''காஞ்சிபுரத்திலும் சேலத் திலும் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த காவலாளிகள் வெட்டிக் கொல்லப்பட்ட சம் பவங்கள்தான் தமிழகத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொலைச் சம்பவங்கள். மற்றபடி, இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஏழெட்டு சம்பவங்களும் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சிகள்தான். அவை அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இப்படி ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும், பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் என்று வங்கி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
முதலில் அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் செக்யூரிட்டிகளை  கண் டிப்பாக நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படுபவர்கள், அந்த வேலைக்குத் தகுதியான ஆட்கள்தானா என்பதைப் பார்த்து தேர்வுசெய்ய வேண்டும். பல இடங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நோயாளிகளாகவும் கண்பார்வை சரியில்லாதவர்களாகவும் உள்ளனர். அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் காண்காணிப்பு கேமராக்களைக் கட்டாயமாக்க வேண்டும். அவை செயல்படுகிறதா என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளை முறையாகச் செய்துவிட்டாலே, பெரும்பாலான தவறுகளைத் தடுத்துவிட முடியும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ, வேறு காரணங்களினாலோ கேமராக்கள் பழுதாகிவிடும் சமயங்களில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் சேவை ஆட்டோ மெட்டிக்காக நிறுத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதைய தொழில் நுட்பத்தில் இது மிக எளிய வேலைதான். அது போல், பல வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களின் கதவுகள், உள்ளே நடப்பது தெரியாத வகையில், கறுப்பு ஸ்டிக்கரால் ஒட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இதை உடனடியாக அகற்ற வேண்டும். பாதி மறைக்கப்பட்டும் பாதி வெளி யில் தெரியும் வகையிலும் இருக்கலாம்.
கோடிக்கணக்கில் பணம் இருக்கும் இடம் ஏ.டி.எம். மெஷின்கள்தான். அவற்றை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, வங்கி அலுவலகங்கள் மற்றும் லிஃப்டுகளில் உள்ளதைப்போல், அலாரம் வசதியை அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் அமைக்க வேண்டும். இது செலவு குறைவான ஒரு ஏற்பாடுதான். இது எதிர்பாராத ஆபத்து நேரத்தில், மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களையும் முற்றிலுமாக கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களையும் தவிர்த்துவிட வேண்டும்.
காவல் துறை எப்போதும் ஏ.டி.எம். மையங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது என்றாலும், பெங்களூரு சம்பவத்துக்குப் பிறகு ஏ.டி.எம். மையத்தை கண்காணிப்பதை கட் டாயமாக்கி உள்ளோம். ரோந்து சமயத்தில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு பிறப் பித்துள்ளோம். அத்துடன் பணியில் இருந்த காவலர், ஏ.டி.எம். மையத்தில் உள்ள குறிப்புப் புத்தகத்தில், கண்காணித்தற்கு அத்தாட்சியாக கையெழுத்துப் போட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
இதுபற்றி தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். சேவை பொறுப்பாளரிடம் பேசினோம். ''ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பவரின் பாஸ்வேர்டு, அவர் எவ்வளவு தொகை எடுக்கிறார் போன்ற விவரங்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான், ஏ.டி.எம். மைய கதவில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இப்போது அதை மாற்றி வருகிறோம். ஒரு வங்கிக்கு எல்லாப் பகுதிகளிலும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளதால், அவற்றை வங்கி நிர்வாகமே நேரடியாக கண்காணிப்பது முடியாத காரியம். அதனால், அவுட்சோர்ஸிங் முறையில் ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு போன்றவற்றை வெளியில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறோம். எங்களிடம் இருந்து நல்ல தொகைதான் வாங்குகிறார்கள். ஆனால், அவர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, பல தவறுகளை செய்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களையும் அந்த நிறுவனத்தினர்தான் அமைக்கின்றனர். ஆனால், அவை பழுதடைந்தால், உடனே சரிசெய்ய வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவது இல்லை. இப்போது, பிரச்னை தீவிரமடைந்து உள்ளதால், முன்பைவிட அதிகமாக கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக பலப்படுத்துவோம்'' என்றார்.
இதுபற்றி தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் ஜவஹர் என்பவரிடம் பேசினோம். ''வங்கிகள் எந்தளவுக்கு எங்களுக்கு நிதி ஒதுக் குகிறதோ அந்த அடிப்படையில் நாங்கள் பாது காப்பு ஏற்பாடுகளை செய்கிறோம். இவை அனைத் தும் எழுத்துப்பூர்வமான ஆவணங்களுக்குப் பிறகே செய்யப்படுகின்றன. அதனால், இதில் நாங்கள் ஏமாற்றுவதற்கு ஒன்றும் இல்லை.''  
ஆட்டோக்களுக்கு காலக்கெடு விதித்து மீட்டர் நிர்ணயித்ததுபோல், வங்கி ஏ.டி.எம்-களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்வதற்கும் அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். கெடு முடிந்த பிறகும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத ஏ.டி.எம். மையங்களை இழுத்து மூட «வ்ண்டும். தமிழக அரசு இதைச் செய்துவிட்டால் பல அசம்பாவிதங்களை தடுத்து விடலாம்!
- ஜோ.ஸ்டாலின்

0 comments:

அமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்... உஷார், உஷார்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கரன்சி இருக்கிறது. உலக அளவில் எல்லா நாட்டின் கரன்சிகளும் எல்லா நாடுகளிலும் வியாபாரத்துக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. டாலர், பவுண்டு, யூரோ, பிராங்க், யென் போன்ற சில பாப்புலர் கரன்சிகளே உலகம் முழுவதிலும் வியாபாரம் செய்வதற்கு உதவுகிறது. இதில் டாலர் உலகப்பிரசித்தம்.  
வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு பெரும்பாலும் டாலர் களிலேயே பணம் தரவேண்டியுள்ளது. வெளிநாடுகளிலிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் கரன்சியைத் தந்து டாலரை வாங்கி செட்டில் செய்ய வேண்டியுள்ளது. ஒரேநேரத்தில் பலரும் டாலர் வேண்டும் என்று கேட்டுவரும்போது அதன் மதிப்பு உயருகிறது; அதிகமாக விற்கப்படும் கரன்சியின் மதிப்பு குறைகிறது. இதுதான் கரன்சி சந்தையின் நடைமுறை.  
மாறும் கரன்சி மதிப்பு!
இயற்கையாக ஒரு கரன்சியின் மதிப்பு உயர்ந்து, இன்னொரு கரன்சியின் மதிப்பு குறைவது ஒருபக்கம் இருந்தாலும், வேண்டுமென்றே தகிடுதத்தம் செய்து (சண்டை மூட்டிவிட்டுகூட லோக்கல் கரன்சியின் தேவையை அதிகரிக்கச் செய்து), ஒரு நாட்டு பணத்தின் மதிப்பை இழக்கச் செய்வதும் சாத்தியம்தான். ஏனென்றால், பிரச்னை வரும்போது லோக்கல் அரசாங்கங்கள் கரன்சியை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுவிடும். அதிக அளவில் லோக்கல் கரன்சி புழக்கத்தில் இருக்கும்போது டாலரின் மதிப்பு அதிகரிக்கும்.
தவிர, ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்ததாக கரன்சி இருப்பதால் அரசாங்கங்கள் தங்களின் தேவைக்கு  ஏற்றாற்போல் நோட்டை அச்சடித்து வெளியே விட்டுவிடுகின்றன. கன்ஸ்யூமருக்கான இறக்குமதி, சண்டையின்போது போர்த் தளவாடம் இறக்குமதி என பல்வேறு தேவைகளினாலும் டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அரசியல்வாதிகளும், அதிபர்களும், அரசாங்கங்களும்தான். ஆனால், பாதிக்கப்படுவது என்னவோ, தனிமனிதர்களும் முதலீட்டாளர் களும்தான்.
விநோதமான தீர்வு!
இந்தப் பிரச்னைக்கு விநோதமான ஒரு தீர்வாக, அரசாங்கம் மற்றும் எந்தவொரு நாட்டுடனும் சம்பந்தமில்லாத கரன்சியைக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் (இந்த பிட்காயினை வெளியிடுவது யார் என்பது கண்டுபிடிக்கப்படாத ரகசியமாக இருக்கிறது!) வெளியிட்டிருக்கும் வர்ச்சுவல் பணம்தான் இந்த பிட்காயின். இந்த கரன்சி எந்த நாட்டையும் சார்ந்ததில்லை. எந்த அரசும் இதை வெளியிடவில்லை. இதன் பின்னணியில் ரிசர்வ் வங்கிகள் ஏதுமில்லை.
இந்த கரன்சி எந்த அளவுக்கு புழக்கத்தில் இருக்கிறது என்பதை நிர்ணயம் செய்வதும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம்தான். 2030-ம் ஆண்டுக்குப் பிறகு 21 மில்லியன் பிட்காயின் கரன்சிகளை அதிகபட்சமாக வெளியிட்டு, அதற்குப்பின்னர் புது கரன்சிகள் எதையும் வெளியிடாமல் இந்த புரோகிராம் நிறுத்திவிடும் என்கிறார்கள்.
எந்த நாடும் வெளியிடாத இந்த கரன்சி எப்படி இருக்கும்? யார் இந்தக் கரன்சி குறித்த டேட்டாக்களை வைத்திருப்பார்கள்? என்று கேட்பீர்கள். பியர்-டு-பியர் கம்ப்யூட்டிங் என்ற டெக்னிக்கின் மூலமாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே இந்த கரன்சியின் விவரங்கள் இருக்கும். இதை வைத்து உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் அல்லது விற்றும் கொள்ளலாம்.  
இது கரன்சியே அல்ல!
நிறைய இன்டர்நெட் ஸ்டோர்களும், நிறையக் கடைகளுமே இதை பெற்றுக் கொள்வதாகச் சொல்கின்றன செய்திகள். அமெரிக்க அரசின் சட்டப்படி, இது ஒரு கரன்சியே கிடையாது. பண்டமாற்று முறையைபோல் டாலரைத் தந்து இந்த பிட்காயினை வாங்குகிறார்கள். பின்னர் இந்த பிட்காயினைத் தந்து வேறு ஒரு சாமானை வாங்குகிறார்கள் (உதாரணத்துக்கு ஒரு டீ/காபி/புத்தகம் போன்றவை).
அமெரிக்க அரசாங்கமோ, இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்காவுக்குள், பிட்காயின் பொருட்களுக்கு எதிராக மாற்றப்பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும். யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. இதுவும் தவிர, வருமானம், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்பமெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.
ஏறியிறங்கிய மதிப்பு!
இந்த பிட்காயினின் மதிப்பு முதலில் 2009-ல் ஆரம்பிக்கப்பட்டபோது, 25 டாலராக இருந்து; பின்னர் 2011-ல் 250 டாலர் வரை சென்று; பின்னர் திடீரென 150 டாலர் வரை சரிந்து, பின்னர் 2013-ல் 900  டாலர் வரை சென்று, கடந்த வாரத்தில் 700 டாலருக்கு இருந்தது என்கிறார்கள். ஏன் இந்த ஏற்றஇறக்கம் என்றால் ஏகப்பட்ட ஸ்பெக்குலேட்டர்கள் இந்தச் சந்தைக்குள் புகுந்துவிட்டார்கள் என்கின்றனர் பலர்.
அமெரிக்கா மாதிரி சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நாட்டிலேயே இந்த காயின் குறித்து ஒரு தெளிவின்மையும், பிற்காலத்தில் பிரச்னையை உருவாக்கிவிடும் என்ற எண்ணமே அரசாங்கத்திடம் இருக்கிறது. எந்த நிமிடத்திலும் இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடிக்கலாம் என்றும் பலரும் பயப்படுகிறார்கள்.
இந்தியாவில் செல்லாது!
இந்தியாவில், பிட்காயின் சட்டப்படி செல்லுபடியாகாத ஒரு விஷயம். சட்டப்படி செல்லும் விஷயங்களிலேயே சிக்கல்கள் வந்து முதலீடு முழுவதும் பணால் ஆகிவிடுகிற இந்தக் காலத்தில், இதுபோன்ற சட்டப்படி செல்லாத விஷயங்களை வாசகர்கள் நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. நம்மூரில் புத்துணர்ச்சியுடன் அலையும் மோசடி கும்பல்கள் நேரிலோ, மெயிலிலோ உங்களிடம் வந்து, என்னிடம் பிட்காயின் இருக்கிறது என்று சொன்னால், 'அந்த 'பிட்டு’ எல்லாம் என்கிட்ட போடாதீங்க’ என்று விரட்டிவிடுங்கள். இல்லாவிட்டால், ஏமாறுவது நிச்சயம்... ஜாக்கிரதை!
- வேலாயுதம்.

0 comments:

வாக்கிங்... ஜாகிங்... தவறுகள் தவிர்க்கும் வழிகள்!

''உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும். பலன்களை அள்ளித் தரும் இந்தப் பயிற்சிகளை, பலரும் கடமைக்காகச் செய்கின்றனர். 'டாக்டர், வாக்கிங் போகச் சொன்னார் போறேன். ஜாகிங் செய்யச் சொன்னார் செய்றேன்...’ இப்படிக் கடனே என்று செய்பவர்கள் பலர்.
நடைப்பயிற்சியோ ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு செய்யவில்லை என்றால், மூட்டு மற்றும் கால் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் எஸ்.சத்திய நாராயணன்.
'ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ’ (runners knee) என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது.
உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிற சத்தியநாராயணன், முறையான ஓட்டத்துக்கும், நடைக்கும் டிப்ஸ் தருகிறார்.
ஓடினால் வியாதிகள் ஓடும்!
ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரி¢சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.
நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
சிந்தடிக் ஆடைகளை அணிந்து ஓடுவதால் வியர்வை நம் உடலின் மேற்பரப்பில் தேங்கும். உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடல் வெப்பமடைவதை இது தவிர்க்கும்.
சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.
புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
'நட’ப்பது நன்மைக்கே!
சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப்  பின்பற்றுங்கள்.
வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்.
சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.  
ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.

வீக்கத்தைப் போக்கலாம்!
வாக்கிங், ஜாகிங் பயிற்சியில் அடியோ, வீக்கமோ ஏற்பட்டால் ஆர்.ஐ.சி.இ. (R.I.C.E.) என்ற முறையைப் பின்பற்றி முதலுதவி செய்ய வேண்டும். அதாவது,
ஆர்- ஓய்வு (REST): அடிபட்டவுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஐ - ஐஸ் (ICE): அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
சி - அழுத்தம் (COMPRESSION): அடிபட்ட இடத்தைத் துணியால் இறுகக் கட்ட வேண்டும்.
இ - உயர்த்துதல் (ELEVATION) வீக்கமான இடத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
ஜாகிங் பயன்கள்
ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும். தேவை இல்லாத கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கத் துடிப்புடன் செயல்பட முடியும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரையின் அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.
- எம்.புண்ணியமூர்த்தி,
படங்கள்: ர.சதானந்த், அ.ஜெஃப்ரி தேவ்  மாடல்கள்: ஐஸ்வர்யா, பிரணிதா லஷ்மி

0 comments:

சிலிண்டரை வெளியே வைத்து சமைக்கும்போது, விபத்து ஏற்பட்டால் க்ளைம் பெறுவதில் சிக்கல் வரும்

இன்றைய நிலையில் நகர்ப்புறங்களில் காஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. பயன்படுத்துவதற்கு எளிது என்பதில் ஆரம்பித்து, அரசு மானியம், சுற்றுச்சுழலுக்கு  நல்லது என பல சாதகமான விஷயங்கள் இருப்பதால பலரும் அதையே  பயன்படுத்துகின்றனர்.  
ஆனால், இந்த காஸ் சிலிண்டரினால் சில சமயங்களில் விபத்து நடந்து விடுகிறது. இப்படி விபத்து நடந்தால், ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
யார் எடுக்க வேண்டும்?
காஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்க தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டரே எடுத்துவிடுவார்.
அரசு விதிமுறைகளின்படி, காஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். இதற்கான ப்ரீமியத்தை விநியோகஸ்தர் கட்டிவிடுவார். இந்த இன்ஷூரன்ஸுக்கான பாலிசி எண், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டி யதில்லை. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இன்ஷூரன்ஸ் க்ளைம் தொகை போகும்போது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளைம் வாங்கிக்கொள்ளலாம். (பிபிசி, ஐஓசி, ஹெச்பிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரே பாலிசியாக இதை எடுத்து வைத்திருக்கும்.)
பராமரிப்பு முக்கியம்!
காஸ் சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டரால் அங்கீகரிக்கப்பட்ட காஸ் மெக்கானிக் மூலமாக இரண்டு வருடத்துக்கு ஒருமுறை சிலிண்டர், இணைப்புக் குழாய், ரெகுலேட்டர், அடுப்பு ஆகியவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு 75 ரூபாய் கட்டணம் உண்டு. அத்துடன் மெக்கானிக் மாற்றச் சொல்லும் பொருட்களை உடனடியாக மாற்றுவது முக்கியம். இதற்கு தனியாக செலவாகும். இணைப்புக்கு குழாய் சுமார் 170 ரூபாயும், ரெகுலேட்டர் சுமார் 250 ரூபாயும் ஆகும். அரசினால் ஐஎஸ்ஐ முத்திரை அளிக்கப்பட்ட நிறுவனத்தின் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
அதிகபட்சம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இணைப்புக் குழாயை கட்டாயமாக மாற்றவேண்டும். பச்சை கலர் இணைப்புக் குழாயை பயன்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்தும்போது அதிக அளவு விபத்துகள் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் ரசீது வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், விபத்து ஏற்பட்டு க்ளைம் செய்யும் சமயங்களில் இந்த ரசீது கட்டாயம் தேவை.
அதேபோல. காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை அணைத்துவிட்டு உடனடியாக உங்களின் விநியோகஸ்தருக்கு தெரிவிப்பது அவசியம். அவர் வந்து சரிசெய்து தந்தபின் மீண்டும் அடுப்பை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதை சரியாகச் செய்யாமல் விபத்து ஏற்பட்டால், க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
சிலிண்டரை பயன்படுத்தும் முறைகள்!
வீட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக வாங்கப்படும் சிலிண்டர்களை, வேறு எந்தவிதமான காரியத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. அதாவது, ஹோட்டல்களுக்கு விற்பது, அண்டை வீடுகளுக்கு கடன் தருவது போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது நல்லது.
மேலும், உங்களுடைய வீட்டிலே ஏதாவது சுபகாரியங்கள் நடக்கும்போது வீட்டிலே உங்கள் சமையல் அறையில் வைத்து சமைத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதே சிலிண்டரை வெளியே அல்லது தரையில் வைத்து சமைக்கும்போது, அதனால் விபத்து ஏற்பட்டால் அந்தச் சமயத்திலும் க்ளைம் பெறுவதில் சிக்கல் வரும்.
சிலிண்டர் வைக்கும் இடத்துக்கு அருகில் ஸ்விட்ச் போர்டு இருக்கக்கூடாது. அதோடு, அடுப்பு மேடைக்கு கீழ்தான் சிலிண்டர் வைத்திருக்க வேண்டும். எளிதில் தீபற்றிக் கொள்ளும் பொருட்களை வைக்கக்கூடாது.
எப்படி க்ளைம் செய்வது?
சிலிண்டரைப் பொறுத்த வரை, நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ், விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டர் விபத்தினால் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்கு தெரிவிக்கவேண்டும். அவர் விபத்தை நேரில் ஆய்வு செய்து, அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத்  தெரிவிப்பார். க்ளைம் விண்ணப்பத்தையும் தருவார். காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிக்க வேண்டுமெனில், அதையும் நீங்கள் செய்யவேண்டும். இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் க்ளைம் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி, நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்கவேண்டும்.
காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வர காலதாமதமானால், விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்தற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை, காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதை சரிசெய்ததற்கான ரசீதை வைத்திருக்கவேண்டும்.  
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்றிரண்டு தெரு தாண்டி வீட்டை மாற்றினால்கூட, பலசமயங்களில் காஸ் டிஸ்ட்ரிபியூட்டருக்கு தெரிவிப்பதில்லை. இது தவறு.  இதுபோன்ற சமயங்களில் விபத்து ஏற்பட்டால், உங்களுக்கான க்ளைம் நிராகரிக்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
- இரா.ரூபாவதி,  
படம்:  எஸ்.பி. ஜெர்ரி ரினால்டு விமல்.
 எவ்வளவு க்ளைம் பெறலாம்?
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, இவ்வளவு தொகைக்குதான் க்ளைம் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது. விபத்தின் தன்மையைப் பொறுத்தும், அதன் பாதிப்பைப் பொறுத்தும் க்ளைம் தொகை வித்தியாசப்படும். மேற்கூறிய பாதுகாப்பு அம்சங்களையெல்லாம் சிறப்பாகச் செய்தாலே விபத்துகளைத் தவிர்க்கலாம். இதையும் தாண்டி, விபத்து ஏற்பட்டால் இன்ஷூரன்ஸில் க்ளைம் பெற்று, பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்!  

0 comments:

20-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடப் பசங்களை ஆள் இல்லாத ஒரு தீவுக்குள் விட்டுவிடுவார்கள். யார் கடைசியாக எஞ்சி உயிரோடு வருகிறார்களோ, அவர்களுக்குக் கோடிக்கணக்கான 'யென்’ எனப் பரிசுத் தொகை

 
ஹாலிவுட்ல 'சா’ சீரிஸ் படங்கள் பார்த்தவங்கள்லாம் கையைத் தூக்குங்க! சிக்கினவய்ங்களைக் கொடூரமா சிதைச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக் கொல்லுறதைப் பார்த்து இப்படி எல்லாமா சைக்கோஸ் இருக்காய்ங்கனு நீங்க அதிர்ச்சியாவீங்க. அதேபோல பிராட் பிட்- எட்வர்ட் நோர்டன் நடிச்ச 'ஃபைட் கிளப்’ பார்த்திருக்கீங்களா? சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான அதில் அண்டர்கிரவுண்ட் உலகில் மூர்க்கமாக சண்டையிடுவதற்கென்றே ஒரு கிளப் இருக்கும். இப்படி சாவு பயத்தைக் காட்டும் விளையாட்டுகள் நிஜத்திலும் இருக்கின்றன. உலகமெங்கும் இப்படி த்ரில்லிங்குக்காக விளையாடப்படும் இந்த வகை விளையாட்டுகள் யாவும் சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்த கேமை வெறித்தனமாக ஒரு குரூப் விளையாடி வருகிறது.
இதோ சில விளையாட்டுகள்... எல்லாக் கெட்ட விஷயங்களும் அமெரிக்காவில்தான் துவங்கும் போல. மிகக் கொடுமையான இந்த கேம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாதது. வீடியோ கேமில் மட்டுமே இதுபோல பார்க்கக் கிடைக்கும். கலிபோர்னியாவில் இருக்கும் ஓர் இடத்தில் இந்த கேம் நடத்தப்படுகிறது. ஆளரவமற்ற ரயில்வே கிராஸிங்தான் களம்.  அந்த ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங் பக்கத்தில் நின்று அடுத்த ரயில் வரும் பத்து நிமிடங்களுக்குள் போட்டியில் கலந்துகொள்ளும் செம தில் பார்ட்டியின் காலில் பிளாஸ்டிக்காலான ஒரு வகை விலங்கு மாட்டப்படுகிறது. தூரத்தில் 'ப்ளோ ஹார்னோடு’ ரயில் வருகிறது. பதறித் துடிக்கும் அந்த ஆள் ஆக்ரோஷமாகத் தப்பிக்க வேண்டும். உயிர் பயத்தில் விலங்கைத் தூள் தூளாக்கிப் பிய்த்துக்கொண்டு போக வேண்டும். அவசரத்துக்கு அண்டாவுக்குள் கை போகாமல் தவிக்கும் ஆள் என்றால், 'சடசடா சடசடா’ தான். பார்சலில் உடலை அள்ளிப்போட்டோ, போடாமலோ அந்த இடத்திலிருந்து எஸ் ஆகிவிடுவார்கள் இந்த ப்ளட் ஸ்போர்ட்ஸ் க்ளப்பை நடத்துபவர்கள். தப்பித்து வருபவர்களுக்கு டாலர்கள் கத்தைக் கத்தையாகக் கொட்டப்படும். அடப்பாவிகளா!
ஜப்பானில் 'பேட்டில் ராயல்’ என்ற வீடியோ கேம் ஏக பாப்புலர். வீடியோ கேமில் உள்ளது ஒரிஜினலாக நடந்தது என்பதுதான் ஷாக்கிங். 20-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடப் பசங்களை ஆள் இல்லாத ஒரு தீவுக்குள் விட்டுவிடுவார்கள். யார் கடைசியாக எஞ்சி உயிரோடு வருகிறார்களோ, அவர்களுக்குக் கோடிக்கணக்கான 'யென்’ எனப் பரிசுத் தொகை அறிவித்து விட, அடுத்து நிகழ்வது கொடூரத்தின் உச்சம். இந்த கேமில் ஃப்ரெண்டாவது மண்ணாவது! ரத்த சகதிக்குள் மூழ்கித் திளைத்து எஞ்சி வருபவருக்குப் பரிசு. 'இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை’ என்போரும் உண்டு. 'நடந்திருக்கிறது. ஆனால் இந்த கேமில் உள்ளதுபோல ஸ்கூல் பசங்க இல்லை’ என்கிறார் 'பேட்டில் ராயல்’ கேமைப் படமாக இயக்கிய கின்சி ஃபியுகோசாகு!
இதுவும் ஜப்பானிய கேம்தான். 'வெய்ப் க்ரூயெஸ்’ என்ற ஒரு கேம். இதில் டகோடரி என்ற போதையோடு திரியும் ஒரு குரூப்பை த்ரில்லிங்குக்காக ஒரு தனி இடத்தில் வைத்து வெறி ஏற்றி மோதவைப்பார்கள். ஜெயிப்பவர்களுக்குப் பரிசும் தோற்பவர்களுக்கு ஊனமும் பரிசாகக் கிடைக்கும். வலி எல்லாம் மறுநாள் எழுந்து பார்க்கும்போதுதான் அவர்களுக்கே தெரியும். பிய்ந்து தொங்கும் கை கால்களோடு அம்புட்டு அட்ராசிட்டியும் போதையிலே நடப்பதுதான் காரணம்!  
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சூதாட்ட கிளப் சில ஆண்டுகளுக்கு முன்னால் கம்பி எண்ணியது. காரணம் கென்யா போன்ற சிங்கங்கள் அதிகம் நடமாடும் நாட்டுக்கு டூர் பேக்கேஜில் சிலரை அழைத்துச் செல்வார்கள். வெளிப்பார்வைக்கு அது டூர் பேக்கேஜ். நிஜத்தில் அது ப்ளட் ஸ்போர்ட். ஆம். சிங்க சஃபாரி போகும்போது போட்டியாளரை ஜீப்பை விட்டுத் தள்ளிவிடுவார்கள். பந்தய நிமிடம் வெறும் 10 நிமிடங்கள்தான். அந்த வனாந்திரத்தில் சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிப் பிழைக்க வேண்டும். ஜீப்பில் ஒரு ரவுண்ட் போய் வருவதற்குள் பார்ட்டி உயிரோடு இருந்தால், அவருக்குப் பணம். இந்த விளையாட்டில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில் பெரும்பாலும் சிங்கங்கள் மனிதர்களைக் கடிப்பது இல்லையாம். பயத்திலேயே உச்சா போய்க் கத்திக் கதறியதால் சிங்கமே மிரண்டு தெறித்து ஓடிய காமெடி வரலாறெல்லாம் உண்டு!
ரஷ்யா, செர்பியா போன்ற பனிநாடுகளில் காமெடியன் முத்துக்காளை சொல்வதுபோல 'செத்து விளையாடும்’ டெட்லி கேம் ஒன்று உண்டு. 'ரெவெல்யூஷன்’ என பேர். கேம் சிம்பிள்தான். தூக்கு மாட்டிக்கொண்டு லாவகமாக ஒரு நிமிடம் தாக்குப் பிடிக்க வேண்டும். கழுத்து எலும்பு முறிந்து அகாலத்தில் வாயைப் பிளந்து மோட்சம் அடைந்தவர்களும் எக்குத்தப்பாய் தப்பித்து 'எப்பூடி?’ என்பதுபோல காலரைத் தூக்கிவிடுபவர்களும் உண்டு. இதெல்லாம் ஒரு வெளாட்டானு வெளாட்டுக்குக்கூட கேட்காதீங்க பாஸ்.
'அட, என்னங்கய்யா ஒரே ஃபாரின் மேட்டரா இருக்குது. லோக்கல்ல இந்தப் பக்கிங்க இல்லையா?’னு கேட்குறீங்கதானே? கேரளாவில்கூட ஒரே நேரத்தில் இரு ட்ராக்குகளில் வேகமாகக் கடக்கும் ரயில்களுக்கு நடுவே பயப்படாமல் நடந்துவந்தால், 100 ரூபாய் பந்தயம் வைத்த குரூப்பை அள்ளிட்டுப்போய் போலீஸ் ஜெயிலில் வைத்து பாடம் எடுத்தது தெரியுமோ?
- ஆர்.சரண்

0 comments:

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

இவன்தான் ஸ்ரீஜித்... எங்க வீட்டு இளவரசன்!'' - முகம் மலர தன் மகனை அறிமுகப்படுத்துகிறார் தீபா ராமகிருஷ்ணன். குட்டியாகப் பட்டு வேஷ்டியும் மை நீலத்தில் பட்டுச் சட்டையும் அணிந்துகொண்டு, அப்பா ராமகிருஷ்ணனின் மடியில் சாய்ந்திருந்த ஸ்ரீஜித்துக்கு எட்டு வயது. 'நான்காவது படிக்கும் பையனாக இருக்கும்’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஸ்ரீஜித்துக்கு இன்னும் கழுத்து நிற்கவில்லை; எழுந்து நிற்க முடியாது; யார் உதவியும் இல்லாமல் உட்கார முடியாது; குறிப்பாகப் பேச முடியாது. பிறந்தது முதல் எட்டு வருடங்களாக இதே நிலைதான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, உணர்த்துவது அனைத்தும் புலன்களின் செயல்பாடுகளின் மூலம்தான். ஆனால், அந்த இனிய இல்லத்தின் குட்டி இளவரசன்... ஸ்ரீஜித்!
அவனுடைய இந்த நிலைக்காக வீட்டில் யாரும் அழுவதோ, புலம்புவதோ, பரிதாபப் படுவதோ கிடையாது. அன்றாடம் காலையில் காபி போடுவதில் இருந்து கார்த்திகைக்கு விளக்கு ஏற்றுவது வரை வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அவனுக்கு உணர்த்தப்படுகின்றன. அவன் சிந்தனைக்கு எட்டிய வரையில் புரிந்துகொண்டு 'ரியாக்ட்’ செய்கிறான்!
''பிறந்து பத்து நாள் நார்மலாத்தான் இருந்தான். பதினோராவது நாள், நிறுத்தாமல் அழுதான். பால்கூட குடிக்காம, தூங்காம தொடர்ந்து அழுகை! பரிசோதனை பண்ணிப் பார்த்தா, மூளையில் மிக நுண்ணிய மாறுபாடு இருந்துச்சு. மூணு மாசத்துக்குப் பிறகும் தலை நிக்கலை. அதனால குப்புத்துக்கிறது, தவழ்றதுனு எதுவும் நடக்கலை. அப்புறம்தான் அவனுக்கு செரிப்ரல் பால்ஸி  மென்டல் ரிட்டார்டேஷன் குறைபாடு இருக்குனு கண்டுபிடிச்சாங்க.  'பிரசவத்தின்போது தொப்புள்கொடி இறுக்கமாகச் சுத்திப் பிறந்ததால், மூளைக்குப் போற ஆக்சிஜன் தடைபட்டு, அதனால் இயங்கு திசுக்கள் (மோட்டார் செல்ஸ்) எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு’னு சொன்னாங்க. 'முழுக்க முழுக்க தெரபி யால் மட்டுமே அவனை ஓரளவுக்காவது நார்மல் ஆக்க முடியும்’னும் சொன்னாங்க.
அதைக் கேட்ட நொடி, என் மனசு பதறுச்சு. 'என்ன செய்யப் போறோம்’னு தவிச்சுப்போனோம். ஆனா, உடனே மனசுல ஒரு தெளிவு வந்தது. அவன் எங்க பையன். அவனுக்கு முடிஞ்சவரை சௌகரியமான வாழ்க்கையையும் பாசிட்டிவான உலகத்தையும் மட்டுமே காட்டணும்னு உறுதி எடுத்தோம். இதோ... இந்த நிமிஷம் வரை அவனை அப்படித்தான் வளர்க்கிறோம். அவன்தான் எங்க உலகம். அவனை மையப்படுத்திதான் எங்க இயக்கம்!'' என்று சொல்லும் தீபா, தலை கவிழ்ந்திருக்கும் ஸ்ரீஜித்திடம் நான் வந்திருப்பதைத் தெரிவிக்கிறார். புரிந்தது போன்றதான ஓர் உடல்மொழி ஸ்ரீஜித்திடம் வெளிப்படுகிறது!
தீபா, ஓர் ஆசிரியை. தன் மகனின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்காக ஸ்பெஷல் எஜுகேஷனில் பி.எட்., படிப்பை முடித்திருக்கிறார்.
''இவனைக் கைக்குழந்தையா, ஒவ்வொரு டாக்டர்கிட்டயும் தூக்கிட்டுப் போறப்ப... அங்கே, வாயில் எச்சில் வழியத் தலையைத் தொங்கப் போட்டபடி இருக்கிற குழந்தைகளைப் பார்த்து எனக்கு வயித்தைப் பிசையும். சிறப்புக் குழந்தைகளின் பிரச்னைகளைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்க விரும்பி சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கல்வியைப் படிச்சேன். தரமணி, ஸ்பாஸ்டின் சிறப்புப் பள்ளிக்கு என் மகனை அழைச்சுட்டுப் போய்ட்டு வந்தப்போதான், அந்தக் குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகானதுனு புரிஞ்சுது. ஸ்ரீஜித்தை ஏழரை வயசு வரை ஸ்பெஷல் ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போனேன். அப்புறம் சில காரணங்களால் போக முடியலை. ஆனா, அந்தக்  குழந்தைகளுக்கு கல்வி ரெண்டாம்பட்சம்தான். சிகிச்சைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கணும். மத்தக் குழந்தைங்க மாதிரி இவங்களை, ஒரு வகுப்பில் 30 பேரை உக்கார வெச்சுச் சொல்லித்தர முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க குறைபாடுகள், ஏற்புத்திறன், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து தனித்தனியாத்தான் சொல்லித்தர முடியும். அதனால் பெற்றோர்கள்தான் அவரவர் குழந்தைகளுக்கான, பாடங்களைத் தயாரிக்கணும். 'பிரைட் கலர்’னா, ஸ்ரீஜித் கண்களை விரிச்சுப் பார்ப்பான். அதனால் எங்க வீட்டு சுவர்கள், பெட்ஷீட், தலையணை உறை எல்லாமே அடிக்கிற நிறங்களில்தான் இருக்கும்.  
பொதுவா சிறப்புக் குழந்தையின் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், 'இது என் தங்கை/தம்பி’னு சொல்லத் தயங்குவாங்க. ஆனா, மனதளவில் அவங்களைத் தயார்ப்படுத்தணும். என் மகள் ஸ்னேகா, நண்பர்களுக்கு தன் தம்பி ஸ்ரீஜித்தை பெருமிதமா அறிமுகப்படுத்துவா. அவ டூர் போறப்ப, ரயில்வே ஸ்டேஷனுக்கு அவனையும் அழைச்சிட்டு வந்து டாட்டா காட்டணும்னு சொல்லி வரவைப்பா. அவனுக்கு டிரெஸ் பண்ணிவிடறது, தலை வாரிவிடுறதுனு பார்த்துப் பார்த்து அலங்கரிப்பா. எங்க வீட்டில் கணவர், மகள், எங்க பெற்றோர்கள்னு எல்லோருமே ஸ்ரீஜித்தைக் கொண்டாடுறப்போ, இது வரம்னு தோணும்!'' என்று நெகிழும் தீபா, சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்கிறார்.  
இப்படியான சில குறைபாடுகளோட பிறக்கும் குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டுக்கிட்டு, 'என் குழந்தையைக் கொன்னுடுங்க’னு சொல்ற பெற்றோர்களைப் பத்தி அப்பப்போ செய்திகளை வாசிக்கிறப்ப மனசு ரொம்ப கனமாயிடும். இத்தனை வருஷம் ஸ்ரீஜித்தை நான் பராமரித்ததில் புரிஞ்சுக்கிட்டது ஒண்ணுதான்.. இந்தச் சிறப்புக் குழந்தைகள் நாம வசிக்கும் சராசரி உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா, அது ரொம்பக் கஷ்டம். ஆனா, அவங்க உலகத்துக்கு நாம போய்ட்டா, அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை!''
பிசியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாக 'ஸ்டாண்டிங் சேரில்’ மணிக்கணக்கில் தலை கவிழ்ந்து நின்றுகொண்டிருக்கும் ஸ்ரீஜித்தின் முடியைக் கோதி முத்தம் இடுகிறார் தீபா. அவன் மேனியெங்கும் சின்னப் புல்லரிப்பு நிகழ்கிறது... என் மனதிலும்!  

சிறப்புக் குழந்தைகள் பராமரிப்புக்கான அரசின் சலுகைகள்:
குழந்தைக்கு என்ன குறைபாடு, எத்தனை சதவிகிதம் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அரசு மருத்துவரின் சான்றிதழை வைத்து, 'தேசிய மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை’ பெறலாம். அதன் மூலம் இந்தியா முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளைப் பெறலாம்.
தமிழக அரசு, சிறப்புக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் பராமரிப்புத் தொகை ரூபாய் 1,000 வழங்குவதோடு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பள்ளி சென்று வர, பயணப்படியும் வழங்குகிறது.  
மத்திய அரசாங்கம் 'நிரமயா’ எனும் மருத்துவக் காப்பீடு வசதியை வழங்குகிறது. இதன் மூலம் அறுவைசிகிச்சைக்கான மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சைக் கட்டணங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
பெற்றோரின் வருமானத்துக்கு, சிறப்பு வருமான வரிவிலக்கு உண்டு.
மாதப் பராமரிப்புத் தொகை வாங்காதவர்களுக்கு, 'பென்ஷன்’ சலுகை உண்டு.
'செரிப்ரல் பால்ஸி’ பாதித்தவர்களுக்கான நாற்காலி, மற்ற செயற்கை உபகரணங்கள் அனைத்தும் இலவசம்.
ரயில் கட்டணச் சலுகை, பேருந்துக் கட்டணச் சலுகைகள் உண்டு.
கடந்த 30 வருடங்களாக, சிறப்புக் குழந்தைகளின் பரமாரிப்புக்குத் தேவையான வழிகாட்டலை தன்னலம் பாராது செய்துவருபவர் திருமதி அம்புஜம். சிறப்புக் குழந்தைகளுக்கு அரசாங்க சார்பில் வழங்கப்படும் சலுகைகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இவரை, 9962378089 என்ற எண்ணில் அழைக்கலாம்.
பிரேமா நாராயணன், படங்கள்: உசேன்

0 comments:

பத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்!

இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க எந்த மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த விஷயங்களில் மற்ற மாநில நடைமுறைகளில் உள்ள சிறந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம்!
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம் இடம் பெறும்போது, மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான நடவடிக்கை, இந்தியாவில் முதல்முறையாக மத்தியப்பிரதேசத்தில் 2005-ல் கொண்டுவரப்பட்டது. அதாவது, கிரயப் பத்திரத்தில் குறிப்பிடும் சொத்தின் புகைப்படத்தைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்கிற நடவடிக்கையை அமல்படுத் தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களிலும் அமல்படுத்தப் பட்டது. காலி நிலங்களுக்கு ஒரு புகைப்படமும், வீடு அல்லது அடுக்குமாடி கட்டடங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் (முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் படம்) இணைக்கப்பட்டன. இந்த நடைமுறையைத் தமிழகத்திலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பத்திரப்பதிவின்போது விற்பவரின் பெயரில் உள்ள பட்டா சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் சமீபத்தில் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றை (பட்டா) கிரயப் பத்திரம் பதியும்போது விற்பவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்ய பத்திரம் பதியும்போது, விற்பவர் பெயரில் உள்ள பட்டாவைக் கொண்டுவருவது கட்டாயம் என கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் நடைமுறையாக உள்ளது. இதைத் தமிழகம் முழுக்க  கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்!
ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்களை 1998-ம் ஆண்டு முதல் பதிவுத் துறையின் வெப்சைட் மூலம் பார்க்கும் வசதி (e-encumbrance) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டு காலத்துக்கான வில்லங்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த வசதி 2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வீட்டில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் சொத்து விவரங்களைப் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் ஏதாவது மோசடி நடந்திருந்தாலும் தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம்.
பவர் ஆஃப் அட்டர்னி!
தமிழகத்தில் கடந்த 2010 முதல் பவர் ஆஃப் அட்டர்னி தொடர்பாக பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பத்திரப்பதிவு மோசடி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பவர் ஆஃப் அட்டர்னி தரப்பட்டிருக்கும் விஷயத்தை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடும் வசதி தமிழகத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எலெக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி (e-General Power of Attorney) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வசதி, ஆந்திராவில் பத்திரப்பதிவு வெப்சைட்டில் உள்ளது.
பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் யார் எழுதினார்கள், யார் ஏஜென்ட், அந்த பவர் பத்திரம் தற்போதும் அமலில் உள்ளதா மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் எழுதப்பட்ட பிற பத்திரங்கள் எவை என்பதை ஒருசில விநாடிகளிலே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வசதி தமிழகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பவர் ஆஃப் அட்டர்னி, ஒரு வருடத்துக்குதான் செல்லுபடியாகும். இதைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
பத்திரப்பதிவு: தொடர் விவரங்கள்..!
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அமலில் உள்ள ஒரு சிறப்பான நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம். புதுச்சேரியில் ஒரு பத்திரம் பதிவு செய்யும்போது, அந்தப் பத்திரத்தின் தாய்ப்பத்திரம் மற்றும் மூலப்பத்திரத்திலும் இந்தப் பத்திரப்பதிவு விவரம் குறிப்பிடப்படுகிறது.
உதாரணத்துக்கு, 2013-ல் பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்துக்கு 2002-ம் ஆண்டு தாய்ப்பத்திரம் மற்றும் 1987-ம் ஆண்டு மூலப்பத்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சொத்து பதிவு செய்யும்போது அசல் தாய்ப்பத்திரம் மற்றும் அசல் மூலப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த மூலப்பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டு பத்திரப்பதிவு எண் குறிப்பிடப்படும்.
எந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட மூலப்பத்திரம் மற்றும் தாய்ப்பத்திர விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் போலிப் பத்திரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நல்ல நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை..!
இந்தியாவில் சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், முத்திரைத்தாள் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. (பார்க்க அட்டவணை) தமிழகத்திலும் இதுபோன்ற கட்டணச் சலுகைளை அமல்படுத்தலாம். இதன்மூலம் பெண்களுக்கு கூடுதல் சமூக அஸ்தஸ்து கிடைக்கும். மேலும், குடும்பச் சொத்துகள் எளிதில் விற்கப்படுவது குறையும்.
கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!
தமிழகத்தில் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது முத்திரைக் கட்டணம், சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 7% மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இதைவிட மிகக் குறைவான கட்டணம் உள்ளது.
முத்திரைத்தாள் பதிவுக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் பலரும் பத்திரம் பதிவு செய்யாமல், பவர் ஆஃப் அட்டர்னி நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்கலாம்.
குறைவான முத்திரைத்தாள் கட்டணம் உள்ள மாநிலங்கள் என்று பார்த்தால்,  குஜராத்தில் 4.9 சதவிகிதமாகவும், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 5 சத விகிதமாகவும், ஆந்திரப்பிரதேசத்தில் 4 சத விகிதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 சத விகிதமாகவும் உள்ளன.
குறைவான பத்திரப்பதிவு கட்டணம் உள்ள மாநிலங்கள் எவை என்று பார்த்தால், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 10,000 (அதிகபட்சம்) ரூபாயும், ஹரியானாவில் 15,000 (அதிகபட்சம்) ரூபாயும், இமாச்சலப்பிரதேசத்தில் 25,000 (அதிகபட்சம்) ரூபாயும் மஹாராஷ்ட்ராவில் 30,000 (அதிகபட்சம்) ரூபாயும் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள சில மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தில் உச்சவரம்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
இதர மாநிலங்களில் உள்ள சிறப்பான பத்திரப்பதிவு நடைமுறைகளைத் தமிழகத்தில் கொண்டுவருவதன்மூலம், தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஏற்படும் மோசடிகளை வெகுவாகக் குறைத்துவிடலாமே!

0 comments:

அயன்’ படத்தில் காங்கோ நாட்டில் சூர்யா ஒரு துரத்தல் சேஸ் செய்வாரே அதுதான் 'யமகசி’ ஸ்டைல்!

யூ-டியூபில் 'யமகசி’ (Yamakasi) படத்தின் ஸ்டன்ட்களை ரசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால், 'அயன்’ படத்தில் காங்கோ நாட்டில் சூர்யா ஒரு துரத்தல் சேஸ் செய்வாரே அதுதான் 'யமகசி’ ஸ்டைல்! தேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்களால் மட்டுமே உடலை அப்படி ரப்பராக வளைத்துக் கட்டடம் கட்டடமாகத் தாவிச் செல்ல முடியும். பூனையைப்போல தாவித் தாவிச் செல்லும் அந்தக் கலைக்கு 'பார்க்கர் ஸ்டன்ட்ஸ்’ ( parkour stunts) என்று பெயர். எதைச் செய்தாவது உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என மெனக்கெடுபவர்களுக்கு இந்த ஸ்டன்ட் அல்வா போல. ரஷ்யாவின் 19 வயது அலெக்ஸாண்டர் ரஸினோவ் அந்த ரகம்தான். இந்த பார்க்கர் ஸ்டைலில் கில்லாடி.
ரஷ்யாவின் சரடோவில் பிறந்த அலெக்ஸாண்டர் புதுசாய் ஏதாவது பண்ணினால் உலகப் புகழ் பெறலாமே என நினைத்து உடம்பை ஒரு வருடம் பிரத்யேகமாகத் தயார்படுத்தினார். புகழ்பெற்ற வோல்கா நதிப் பாலத்தில் முதன்முதலாக தன் அட்ராசிட்டியை ஆரம்பித்தவர் ரஷ்யாவின் உயர உயரமான 

ஒருமுறை உயரமான கட்டடத்தின் விளிம்பில் நின்று வித்தை காட்டியபோது ஸ்லிப்பானவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன் பிறகு இந்த ஸ்பைடர்மேன் முன்னிலும் தீவிரமாக உடம்பை ஃபிட்டாக வைக்கத் தொடங்கினார். ரஷ்யாவின் எல்லைகள் தாண்டி ஐரோப்பா வரை இந்தச் சின்ன வயதில் சாகசப் பயணங்களில் ஈடுபட்டு இணையத்தில் 'ரியல் ஸ்பைடர்மேன்’ எனப் பாராட்டப்படுகிறார். ஆனாலும் அலெக்சாண்டரை வீட்டில் திட்டித்தீர்க்கிறார்கள். 'பின்னே இப்படி உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் மரண விளையாட்டில் ஈடுபட்டால்...’ என்பது அலெக்ஸ் பெற்றோரின் ஆதங்கம். ஆனால் ஒரே ஒரு குடும்ப ஜீவன் மட்டும் அலெக்ஸை வாயார வாழ்த்துகிறது. அது அலெக்ஸின் பாட்டி.
'ஏ குரங்கு போலே...குரங்கு போலே தாவி வாடா செல்லப் பேராண்டி’னு பாட்டுப் பாடுமோ அந்த ஆத்தா?
- ஆர்.சரண்

0 comments:

ஒரு முட்டை வேக வைக்கப்பட்டதா, இல்லையா என்பதை, ஓட்டை உடைக்காமல் எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு முட்டை வேக வைக்கப்பட்டதா, இல்லையா என்பதை, ஓட்டை உடைக்காமல் எப்படிக் கண்டுபிடிப்பது? அதைச் சமமான தளத்தில் வைத்துச் சுற்றுங்கள். வேக வைக்கப்பட்ட முட்டையாக இருந்தால், அது அதிக நேரம் சுழலுவதுடன், வேகமாகவும் சுழலும். பச்சை முட்டையைச் சுழற்றுவது கடினம். வேக வைக்கப்பட்ட முட்டை ஒரு முழுமையைப் பெற்றதாக இருப்பதால் சுற்றுகிறது. ஆனால், பச்சை முட்டைக்குள் இருக்கும் பல்வேறு விதமான திரவங்கள் அதைச் சுழலவிடாமல் தடுக்கின்றன.  
அத்துடன், வேகவைக்கப்பட்ட முட்டை சுற்றும்போது, விரலால் தொட்டால், அது உடனடியாக நின்றுவிடும். பச்சை முட்டையை நிறுத்த முயன்றாலும் சுற்றிக்கொண்டிருக்கும். இவை இயற்பியல் தொடர்பான உண்மைகள்.  
ஒருவர், வழக்கமான கோணத்தில் இல்லாமல் மாற்றிச் சிந்திப்பவராக இருந்தால்தான் புதியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்தப் பயணத்துக்காக 18 ஆண்டுகள் மெனக்கிட்டார். ஆனால், கடைசியில் புதிய உலகம் என்று கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவை அடைந்தார். அவர், தனது பயணத்தைப் பற்றிய விஷயத்தை முன்வைத்தபோது, 'முட்டாள்தனமான கனவு காண்பவர்’ என்றே பலராலும் கருதப்பட்டார்.  ஆனால், பயணத்தை முடித்துத் திரும்பி வந்தபோது, பெரிய சாதனையாளர் என மதிக்கப்பட்டார். கொலம்பஸின் சாதனை சிலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது.
ஸ்பெயின் நாட்டு கனவான்கள் அவருக்கு விருந்து  ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அவர்களில் சிலர் ஆணவம் பிடித்தவர்கள். அவர்களில் ஒருவர் கொலம்பஸிடம், 'யார் வேண்டுமானாலும் கடல் வழியாகப் பயணம் செய்து மற்றொரு நிலப்பரப்பை அடையலாமே! இது ஒரு சாதனையா?' என்று கேட்டார். கொலம்பஸ் உடனே அருகிலிருந்த வேகவைத்த முட்டை ஒன்றை எடுத்துக் காட்டி, ''உங்களில் யாராவது இந்த முட்டையை நிற்க வைக்க முடியுமா?' என்று கேட்டார். ஒவ்வொருவராக முயற்சித்தனர். எவராலும் முடியவில்லை. கடைசியில் கொலம்பஸ் அந்த முட்டையை வாங்கி, அதன் முனைப் பகுதியை லேசாக மேசையில் ஒரு தட்டுத் தட்டி, அதன் ஓட்டை நுனியில் சற்று உடைத்து, நிற்க வைத்துக் காட்டினார்.  அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். 'முதலில் ஒன்றைச் செய்துகாட்டுவது கடினம். அதற்குப் பிறகு யார் வேண்டுமானாலும் அதை எளிதாகக் காப்பியடிக்க முடியும்' என்றார் கொலம்பஸ்.
நுட்பமாகச் சிந்திப்பது வேறு; வித்தியாசமாகச் சிந்திப்பது வேறு. நுட்பமான கணக்குகள் உண்டு. ஆனால், அவற்றில் மாற்றிச் சிந்திப்பதற்கு வழியில்லை. முறையாகச் சிந்திப்பதே சரியான தீர்வு தரும்.  
உதாரணமாக... உங்களிடமும், என்னிடமும் சம அளவு பணம் இருக்கிறது. நான் உங்களுக்கு எவ்வளவு கொடுத் தால், என்னை விட உங்களிடம் பத்து ரூபாய் அதிகம் இருக்கும்?
பெரும்பாலானோர் சட்டென்று 10 ரூபாய் என்பார்கள்.
என்னிடமும் உங்களிடமும் தலா 50 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், நான் உங்களுக்கு 10 ரூபாய் கொடுத்தால், என்னிடம் 40 ரூபாய் இருக்கும். உங்களிடம் அறுபது ரூபாய் இருக்கும். ஆகவே, வித்தியாசம் இருபது ரூபாய் ஆகும். எனவே, '10 ரூபாய்’ என்பது தவறான
பதில். நான், ஐந்து ரூபாய் கொடுத்தால், என்னிடம் மீதி நாற்பத்தைந்து இருக்கும்; உங்களிடம் ஐம்பத்தைந்து இருக்கும். எனவே, ஐந்து ரூபாய்தான் சரியான பதில்.
இன்னொரு கேள்வி.  
என்னிடம் பூனையும், நாயுமாக பத்து வளர்ப்பு மிருகங்கள் இருக் கின்றன. 56 பிஸ்கட்டுகளை நான் அவற்றுக்கு பகிர்ந்தளிக்க வேண் டும். நாய்க்கு 6, பூனைக்கு 5 எனப் பகிர்ந்து கொடுத்தால், எத்தனை நாய்கள், எத்தனை பூனைகள் என்னிடம் இருக்கின்றன?
இந்தக் கேள்விக்கு அல்ஜீப்ராவை உபயோகப்படுத்தி 6 நாய்களும், 4 பூனைகளும் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பொது அறிவைப் பயன்படுத்தினால் இன்னும் சுலபமாக இதற்கு விடை காண முடியும்.
நாய், பூனை எல்லாமாக மொத்தம் 10 மிருகங்கள். ஒவ்வொன்றுக்கும் 5 பிஸ்கட்டுகள் கொடுத்தால், 50 தீர்ந்துவிடும். இப்போது மீதம் 6 பிஸ்கட்டுகள் இருக்கும். எனவே, நாய்களின் எண்ணிக்கை 6 என எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இவையெல்லாம் கணிதப் புதிர்கள். என்னதான் மாற்றி யோசித்தாலும், எளிதில் விடை காணலாமே தவிர, ஒரே ஒரு சரியான விடைதான் இவற்றுக்கு உண்டு.
இன்னொரு புதிர் பார்ப்போம். குள்ளமான மனிதர் ஒருவர் மழைக்காலத்தில் மாத்திரம், தான் வசிக்கும் 10-வது மாடிக்குத் தனியாகச் செல்லும்போது, லிஃப்டில் கடைசி வரை செல்கிறார். மற்ற நேரங்களில் 2-வது மாடி வரை மட்டுமே லிஃப்டில் சென்று, பிறகு படியேறிச் செல்கிறார். ஏன்?
வித்தியாசமாக யோசித்தால், இதற்குப் பல விடைகளைக் காண முடியும். குள்ள மனிதர் மழைக்காலத்தில் குடை எடுத்துவருவார் அல்லவா? அந்தக் குடையைக் கொண்டு 10-வது மாடிக்கான பட்டனைத் தட்டுவார். மற்ற நேரங்களில், தன் கைகளுக்கு எட்டும் 2-வது மாடிக்கான பட்டனையே அவரால் தட்ட முடியும். எனவே, 2-வது மாடி வரை லிஃப்டில் சென்று, பிறகு படியேறுவார். இது ஒரு விடை.  
ஒரு சிறுவன் ஆறு ஆப்பிள்கள் வாங்கிவந்தான். வீட்டுக்கு வந்தபோது அவனிடம் இரண்டு பழங்கள்தான் இருந்தன. எனில், எவ்வளவு பழங்களை வழியில் தொலைத்தான்?
இதைக் கணிதப் புதிராகக் கருதினால், 4 என பதிலளிக்கலாம். ஆனால், மாற்றி யோசித்தால், வேறு பல விடைகள் கிடைக்கும்.
அவன் எதையும் தொலைக்கவில்லை. 4 பழங்கள் திருடுபோய்விட்டன.  
தொலைத்தவை மூன்று. ஒன்றை அவன் வழியில் தின்றுவிட்டான்.
எந்தப் பழமும் தொலையவில்லை; திருடுபோகவில்லை; எதையும் அவன் தின்னவும் இல்லை. நான்கு பழங்களையுமே பழரசமாக்கிக்கொண்டு வந்தான்.
நம் வாழ்க்கையில் வரும் பிரச்னைகளும் இப்படித்தான். அவற்றுக்குப் பல விடைகள், பல தீர்வுகள் இருக்கின்றன. எனவே, கணிதத்தைப் போல அவற்றைக் குறிப்பிட்ட வழிமுறையில் தீர்க்க முடியாது. சூழலுக்குத் தகுந்த மாதிரி தீர்வைத் தேடிக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதை நம்முடைய இலக்கியங்களும், இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
கிடைக்கும் தடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு புலன் விசாரிப்பது ஒரு வகை.  இல்லாததையும் வைத்துக்கொண்டு துப்பு துலக்குவது இன்னொரு வகை. இதுதான் மாற்றி யோசிப்பது. ஒரு கொலையில் எது விடுபட்டது என்பதை ஆராய்வார் ஷெர்லாக் ஹோம்ஸ்.
உதாரணமாக, வீட்டுக்குள் ஒரு கொலை நடந்துள்ளது. கொலை நடந்த நேரத்தில், தோட்டத்தில் இருந்த நாய் குரைக்க வில்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது. நாய் குரைக்காததுதான் விடுபட்ட சங்கிலி. எனவே, நாய்க்குப் பழக்கமான ஒருவர்தான் குற்றவாளியாக இருக்கவேண்டும் என யோசித்து, அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் நபர்களை ஆராய்ந்து குற்றவாளி யைக் கண்டுபிடிப்பார் ஷெர்லாக் ஹோம்ஸ். இதுதான் மாற்றி யோசிக்கும் யுத்தி.
வித்தியாசமாகச் சிந்திப்பதில் மன்னன் என பெர்னார்ட்ஷாவைச் சொல்லலாம்!
பெர்னார்ட்ஷாவை ஒரு பிரபல போட்டோ கிராபர் படம் பிடித்தார். அதற்காகத் தமக்கு 200 பவுன் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.
உடனே, பெர்னார்ட்ஷா அவருக்கு 20 செக்குகளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு செக்கும் 10 பவுனுக்கு இருந்தது. அதற்கான காரணம் புரியாமல் போட்டோ கிராபர் குழப்பத்துடன், ''எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்க, பெர்னார்ட்ஷா சொன்னார்...
''இதனால் உமக்கும் லாபம்; எனக்கும் லாபம்! எப்படி என்கிறீர்களா? என் கையெழுத்துக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. என் ஒவ்வொரு கையெழுத்துக்கும் 25 பவுன் விலை கிடைக் கிறது என்று சொல்கிறார்கள்.
ஆகவே, ஒவ்வொரு செக்கும் உங்களுக்கு 25 பவுனுக்கு விற்றுப்போய்விடும். உங்களுக்கு மொத்தம் 500 பவுன் கிடைக்கும். ஆனால், செக்கை வாங்கிக் கொள்கிறவர்கள், அதைப் பணமாக மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு விடுவார்கள். ஆக, எனக்கும் லாபம்தான்!''
இப்படி, 'வின்வின்’ சூழலைத் தனது சாதுர்யத்தால் ஏற்படுத்துகிறார் பெர்னார்ட்ஷா.  
புத்தரிடம் ஓர் இளம்பெண் வந்தாள். இறந்துபோன தன் குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு கதறினாள். புத்தர் அதிசயங்கள் நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டவர் அல்லர். செத்தவர் களைப் பிழைக்கவைக்க முடியாது என்பதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவளுக்குப் புரியாது என்பதால், அவர் ஓர் உத்தி செய்தார்.
அந்தப் பெண்ணிடம், ''உன் குழந்தையைப் பிழைக்க வைக்கவேண்டும் என்றால், இதுவரை சாவு விழாத வீட்டிலிருந்து ஒரு பிடி எள் வாங்கிக் கொண்டு வா!'' என்றார்.  
''அவ்வளவுதானே! இதோ வாங்கிக்கொண்டு வருகிறேன்'' என்று அவள் மகிழ்ச்சியாகக் கிளம்பினாள்.  
முதலில் தென்பட்ட ஒரு வீட்டுக்குச் சென்று, ''கொஞ்சம் எள்ளு இருந்தால் கொடுங்கள்'' என்று கேட்டாள். ''இதோ எடுத்து வருகிறேன்'' என்று அந்த வீட்டு அம்மாள் உள்ளே சென்று, ஒரு பிடி எள் கொண்டு வந்தாள்.
எள்ளை வாங்கப் போன நேரத்தில் தான் அந்தப் பெண்ணுக்கு புத்தர் சொன்ன நிபந்தனை ஞாபகம் வந்தது.
''உங்களை ஒன்று கேட்க மறந்துவிட்டேனே! உங்கள் வீட்டில் இதுவரையில் யாரும் இறந்தது கிடையாதே?'' என்று கேட்டாள் அவள்.
அவ்வளவுதான்... ''ஐயோ! அதை ஏன் கேக்கறேம்மா? போன மாதம்தான் என் தம்பி இறந்துபோனான்'' என்று சொல்லி, அந்த அம்மாள் தம்பியை நினைத்து அழத் தொடங்கிவிட்டாள்.  
இப்படியே அந்தப் பெண் எந்த வீட்டுக்கு எள் கேட்கச் சென்றாலும், அங்கே ஏதேனும் ஒரு மரணம் நிகழ்ந்திருந்தது. கடைசியில் அந்தப் பெண் தோல்வியுடன் திரும்பி வந்து புத்தரிடம், ''மரணமில்லாத ஒரு வீடும் இல்லை ஐயனே!'' என்றாள். உடனே புத்தர், ''அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். உலகில் எதுவுமே நிலையில்லை. அனைத்தும் அழிபவையே! எனவே, உன் குழந்தையின் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! '' என்றார்.  
மாற்றி யோசித்ததன் மூலம், எவ்வளவு எளிதாக அந்தப் பெண்ணின் மனத்தில் ஒரு தெளிவை புத்தர் ஏற்படுத்தி விட்டார், பாருங்கள்!வெ                                   
.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

0 comments: