ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்!’
என் மடியில் இப்போது ஒரு பைபிள் இருக்கிறது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய எபிரேயு கிரேக்கு என்னும் மூல பாஷையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், இது அக்காவின் பைபிள். முன் அட்டையில் எஸ்.எஸ்தர் என்று தமிழில் மை பேனாவை வைத்து எழுதிவைத்திருக்கிறாள்.
'நீ செய்த பாவங்கள் ஒவ்வொன்றும் என் காதுக்கு வரும்போது உன் போட்டோ ஒன்றை எடுத்து இந்த பைபிளுக்குள் வைத்துக் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். கர்த்தர் கருணையானவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், உன் விஷயத்தில் அவர் கொஞ்சம் கூடுதல் கருணை காட்டவேண்டிய அவசியம். ஆகையால் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். என் ஜெபம் வலிமையானது. அது உன்னை ஒவ்வொரு முறையும் சிலுவையில் அறைந்துவிடாமல் காப்பாற்றியிருக்கிறது. ஒருநாள் நீ பைபிள் வாசிப்பாய். அப்போது ஜெபத்தைக் காட்டிலும் பைபிள் வலிமையானது என்று புரியும்!’ - இது அடிக்கடி அக்கா சொல்வது.
'நான் உன்னைத் தண்டிக்கப்போவதில்லை. உன்னை தண்டிக்கும் உடல் வலிமையும் எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. என்றாவது ஒருநாள் யதேச்சையாக உன் கையில் ஒரு பைபிள் கிடைக்கும். அப்படி அது கிடைக்கும்போது அதை நீ வாசிக்கக்கூட வேண்டாம். சும்மா தொட்டாலே போதும். நீ மிகவும் தண்டிக்கப்பட்டதாக நான் உணர்ந்து திருப்தி அடைவேன்! - இப்படி திருநெல்வேலி ஆவினில் வைத்து வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தபடி சொன்ன ஆபிரஹாம் அப்படியே அன்று முதல் காணாமல் போய் விட்டான்.
அப்படிப்பட்ட பைபிள்தான் இப்போது என் மடியில் இருக்கிறது. கட்டாயம் பைபிள் படிக்க வேண்டிய அல்லது படித்திருக்க வேண்டிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை நான். அப்பா செவ்வாய், வெள்ளிகளில் பேய், பிசாசு ஓட்டும் உச்சினிமாகாளி அம்மன் கொண்டாடி. அம்மாவோ எப்போதும் சிவப்புச் சேலை அணிந்தபடி திரியும் ஆதிபராசக்தி. ஆகவே, அம்மா - அப்பாவுக்கும் ஜெருசலேமுக்கும், அம்மா - அப்பாவுக்கும் ஏசுவுக்கும், அம்மா - அப்பாவுக்கும் பைபிளுக்கும், எந்தச் சம்பந்தமும் எப்போதும் இருந்ததில்லை. புதுக்கோட்டை கிறிஸ்துவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அக்கா தான் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் கர்த்தரை வீட்டுக்குக் கூட்டிவந்தவள். அக்காதான் பைபிளைக் கொண்டுவந்தவள். யாருக்கும் தெரியாமல் கர்த்தர் எங்கள் வீட்டுக்குள் இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும்போது, முருகம்மாளாகிய அக்கா எஸ்.எஸ்தராக மாறியிருந்தாள்.
அக்காவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவள் யாருக்காக ஜெபித்தாலும் அவர்கள் பெயரையோ அல்லது அவர்களின் புகைப்படத்தையோ அவர்களின் பிரச்னைக்குத் தகுந்தவாறான அதிகாரத்தில் வைத்தபடி ஜெபிப்பாள். என் புகைப்படத்தை 23-வது சங்கீதத்தில் வைத்திருக்கிறாள். அந்தப் புகைப்படம் நான் முதன்முதலில் கருங்குளம் பள்ளியில் ஆறாவது படிக்கும்போது பஸ் பாஸுக்காக எடுத்த புகைப்படம். எண்ணெய் தேய்த்துத் தலை வாரி, நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறேன். நல்லவேளை இந்தப் புகைப்படத்தில் இருக்கும்போது நான் எந்தப் பாவமும் செய்ததாக இப்போது என் நினைவில் இல்லை. கொஞ்சம் சில்லறைத் திருட்டுகள் இருக்கலாம், அவ்வளவுதான்.
'புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.’ இது யதேச்சையாக நடந்ததா, அல்லது அக்கா திட்டமிட்டுச் செய்தாளா என்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தரிடம் அண்ணனின் வங்கிக் கணக்கு வழக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கா காட்டுவது யதேச்சையானதாக எனக்குப்படவில்லை.
இப்படி எங்கள் எல்லாருடைய பெயர்களையும் பைபிளில் அக்கா இன்னும் எழுதிவைத்துக்கொண்டுஇருப்பதில் எனக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஏனெனில், வீட்டில் தினமும் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எங்கள் பெயர்கள் வெவ்வேறு அதிகாரங்களுக்கும், சங்கீதங்களுக்கும், நீதிமொழிகளுக்கும் மாறும். நான் வீட்டில் எப்போதும் இல்லாத ஒரு ஆளாகிவிட்டதால் எனது புகைப்படம் ஒரே அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், சிவா அண்ணன் பெயர் வாரத்துக்கு ஒரு முறை வசனம் மாறுவதாக மூர்த்தி சொல்லுவான். அக்காவுடன் திருமணம் ஆகி ஆறு மாதமே ஆனாலும், அத்தான் செந்தில் பெயர் கூட ஒரே நாளில் மூன்று நான்கு அதிகாரங்களுக்கு மாறும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆனால், நாங்கள் எல்லாரும் எப்போதோ வசனத்தில் இருப்பதுதான்,,,,
0 comments:
Post a Comment