Tamil news. Tamil real estate news. tamil vastu news. tamil real estate agent news.tamil entertainment.Tamil cinema news. read the tamil Special news and tips on Experts. தவிக்குதே... தவிக்குதே.. | Read the Tamil Special news headlines நம்ம வீடு
 .நம்ம வீடு.காம் தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

தவிக்குதே... தவிக்குதே..

ஆற்றில், பள்ளம் கண்ட இடத்தில் பாய்ந் தோடும் தண்ணீரை இழுத்துப்பிடித்து நிலத்தடி நீராக சேமித்துவைப்பது மணல்தான். ஆற்றில் நீர் வற்றினாலும், மணல் பரப்பில் சில அடி ஆழம் தோண்டி ஊற்றுநீர் எடுப்பதில் இருந்தே இதை அறிய முடியும். ஆண்டுக்கணக்கில் ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மணல் சேகரித்து வைத்துள்ள நிலத்தடி நீர்தான் அது. அது மட்டுமல்ல... மணல் ஒரு மிகச்சிறந்த வடிகட்டி. அது, தன் மேற்பரப்பில் ஓடிவரும் தண்ணீரை சுத்திகரிக்கிறது. எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும், மனி தனால் ஒரு பிடி மணலைக்கூட செயற்கையாக உருவாக்க முடியாது. அது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காடு, மலைகளில் இருந்து அடித்து வரப்பட்ட வளங்களின் களஞ்சியம். அதைத்தான் மொத்தமாகவும், சில்லறையாகவும் கூறுபோட்டு விற்கிறார்கள் மணல் மாஃபியாக்கள். 
'நாடு முழுவதும் மணல் அள்ளத் தடை; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு’ என்கின்றன பத்திரிகை செய்திகள். ஆனால், இந்த உத்தரவு நடைமுறையில் என்னவாக இருக்கிறது? கடந்த வாரம், தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக சில ஊர்களுக்குப் பயணித்ததில், ஆறுகளின் மணல் வெளிகளில் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நின்ற லாரிகளே இதற்குப் பதில் சொல்லின. விழுப்புரத்தில் ஓடும் தென்பெண்ணை ஆறு, இதற்கு ஓர் உதாரணம்.
தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தி ஆகி றது. 400 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு,   40 கி.மீ-தான் கர்நாடகாவில் பாய்கிறது. மீதமுள்ள 360 கி.மீ. தூரம் தமிழ் நாட்டில் ஓடிவரும் தென்பெண்ணை, அதில் 100 கி.மீ. நீளத்தை விழுப்புரம் மாவட்டத்துக்கே வழங்குகிறது. தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளை வகைப்படுத்தும்போது 'காவிரி, தென்பெண்ணை, பாலாறு’ என்று சொல் வார்கள். காவிரியும் பாலாறும் ஏற்கெனவே மணல் கொள்ளையரின் சொர்க்கபுரியாக இருப்பதுடன், அதன் பெரும்பகுதி சூறையாடி முடிக்கப்பட்டுவிட்டது. இடையில் இருக்கும் தென்பெண்ணைதான் இப்போது மணல் மாஃபியாக்களின் முழு பார்வையில் இருக் கிறது.
அரசு மற்றும் தனியார் குவாரிகளை இணைத்துக் கணக்கிட்டால் தென்பெண்ணை ஆறு விழுப்புரத்தில் பாயும் 100 கி.மீ. தூரத்தில் மட்டும் நாளன்றுக்கு 3,000 லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. சாலையோரத்தில் இருந்து பார்த்தால் ஆற்றுக்குள் கண் ணுக்கு எட்டிய தூரம்வரை லாரிகள் மட் டுமே நிற்கின்றன. இனிப்புத் துண்டை மொய்க்கும் எறும்புகளைப்போல, மணல் உள்ள இடத்தை லாரிகள் மொய்க்கின்றன. சாதிக் கலவரங்களால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட சில பகுதிகளில்கூட, மணல் அள்ளுவது எப்போதும் தடைபட்டது இல்லை. அரசின் அனுமதிக்கப்பட்ட வரம் பின்படி ஒரு லாரியில் இரண்டு யூனிட் மணல் அள்ளலாம். அதாவது, 200 கன அடி. ஆனால், நடைமுறையில், அனுமதித்தைவிட இரண்டு மடங்கு மணல் ஏற்றாமல் எந்த லாரியும் குவாரியை விட்டு வெளியில் செல்வதில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் 123 குவாரிகளிலும் இது தான் நிலை.
தனிநபர் வருமானம் மற்றும் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் மாவட் டமும் இதுதான். மும்பை, பெங்களூரு, கேரளா என வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க் கும்போது தென்பெண்ணை ஆறும் அதன் நீர்ப் பரப்பும் அது வழங்கும் விவசாய வாய்ப்பும் இந்த மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பெண்ணை ஆறுதான் குடிநீர் ஆதாரம். விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 1,104 கிராம ஊராட்சிகளில், சுமார் 800 கிராம ஊராட்சிகள், குடிநீருக்கு தென்பெண்ணை ஆற்றை நம்பித்தான் உள்ளன. சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலத்துக்கான விவசாயம் இந்த ஆற்றை நம்பித்தான் இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் இருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள எல்லீஸ் சத்திரம் என்ற இடத்தில் உள்ள பெண்ணை ஆற்றில் இருந்து நகரத்துக்குத் தண்ணீர் வருகிறது. கண்டரக்கோட்டை என்ற இடத்தில் இருந்து திண்டிவனத்துக்குத் தண்ணீர் போகிறது. திருக்கோவிலூரில் இருந்து செஞ்சி, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் வரை தண்ணீர் செல்கிறது. இத்தகைய முக்கியத்துவம் மிக்க பெண்ணையாற்றின் தண்ணீர், மணல் கொள்ளையின் காரணமாக குடிப்பதற்கு லாயக்கற்றதாகி விட்டது. ஒரு பக்கம் இயற்கையாக நீரை சுத்திகரிக்கும் மணல் இல்லை; இன்னொரு பக்கம் ஆற்றின் தரைப் பரப்பில் நச்சுக் கழிவுகளை இடைவிடாமல் திறந்துவிடுகின்றனர். பெண்ணை ஆற்றின் கரையில் சாராயத்தின் மூலப்பொருளான ஸ்பிரிட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் சாயத் தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இவற்றின் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 21 லட்சம் லிட்டர் தண்ணீர், ஆழ்துளை குழாய் மூலமாகவும் ஆற்றில் இருந்து நேரடியாகவும் எடுக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்திவிட்டு, நாளன்றுக்கு 13 லட்சம் லிட்டர் கழிவுநீரை, தென்பெண்ணைக்கே மீண்டும் பரிசாக வழங்குகின்றனர். இதன் காரணமாக ஒரு காலத்தில் சிறுவாணி தண்ணீரின் சுவைக்கு இணையாகப் பேசப்பட்ட பெண்ணை ஆற்றின் தண்ணீர் இன்று கழிவுநீரைப்போல மாறி விட் டது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 20 அடி, 30 அடி ஆழம் தோண்டினாலே நீர் கிடைத்த காலம் உண்டு. இப்போது 250 அடிக்கும் கீழே நிலத்தடி நீர் சென்றுவிட்டது. தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரத்தில் சுமார் 2.5 லட்சம் கிணறுகள் இருக்கின்றன. பூமியின் கடும் பாறைப் பரப்பை வெடிவைத்து தகர்த்து, நிலத்தடியில் தேங்கியிருக்கும் தண்ணீரை உறிஞ்சிதான் இந்தக் கிணறுகள் நீர் பெறுகின்றன. அந்தக் கிணறுகளும் இப்போது வற்றிவிட்டன. மணல் கொள்ளை காரணமாக நிலத்தடியில் நீர் தேங்காததன் விளைவே இது.
தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் எடுத்துச்செல்ல 2009-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. 'மணல் குவாரிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என்றும் அறிவித்தது அரசு. ஆனால், தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட லாரிகள் இங்கு மணலை அள்ளிக்கொண்டு, அண்டை மாநிலங்களில் தாராளமாக விற்பனை செய்கின்றன. இதை எந்தச் சட்டமும் தடுப்பது இல்லை. குறிப்பாக, கேரளாவுக்குத் தேவையான மணல் முழுவதும் தமிழ்நாட்டில் இருந்துதான் செல்கிறது. கேரளாவில் 44 ஆற்றுப் படுகைகள் இருக்கின்றன. ஆனால், 1994-ம் ஆண்டில் இருந்து கேரள ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள அந்த மாநில அரசு தடை விதித்துவிட்டது. எனில், ஒவ்வொரு நாளும் கேரளாவில் கட்டப்படும் புதிய கட்டுமானங்களுக்கான மணல் எங்கிருந்து வருகிறது? தமிழ்நாட்டில் இருந்துதான் செல்கிறது என்பது வெளிப்படை. தமிழ்நாட்டில் ஒரு லாரி மணல் 5,000 ரூபாய் என்றால், கேரளாவில் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.
கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாற்றுப் படுகையின் மணலை அள்ளி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குக் கடத்துகின்றனர். வெளி மாநிலங்கள் மட்டுமல்ல... தமிழ்நாட்டு மணல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2008-09ம் ஆண்டில், இந் தியாவில் இருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆற்று மணலின் அளவு 5.85 லட்சம் டன். 2010-ம் ஆண்டில் இது 10.26 டன்களாக இருந்தது. 'இந்தியாவில் இருந்து மிளகு ஏற்றுமதி... விலை மதிப்பில்லாத முத்துக்கள் ஏற்றுமதி’ என்றெல்லாம் வர லாறு நமக்கு சொல்கிறது. ஆனால்,  மணலை மூட்டைகட்டி ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த இடத்தில் மற்றொரு செய்தி  நினைவுக்கு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், 'கம்போடியாவில் இருந்து சென்னைக்கு மணல் இறக்குமதி’ என்ற செய்தியை நீங்கள் ஊடகங்களில் படித்திருக்கலாம். இப்போதும் இறக்குமதி ஆகிறது. மறைமலை நகரில் கட்டப்படும் வீடு ஒன்றில் பயன்படுத்தப்படும் மணல், கம்போடிய நதியில் பலநூறு ஆண்டுகளாக படிந்திருந்த மணல் படிவாக இருக்கலாம். 'உள்ளூர் மணல் வளத்தைக் காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய் கிறார்கள்’ என்றெல்லாம் அவசரப்பட்டு தவறாக எண்ணிவிட வேண்டாம். உள்ளூர் மணலை வாங்கி விற்பதைக் காட்டிலும், இந்த இறக்குமதி மணலில் லாபம் அதிகம். ஆகவே சிலர் இதைச்செய்கின்றர். சிலருக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்வது லாபமாக இருக்கிறது. ஆகவே, அவர்கள் அதைச் செய்கின்றனர்.

Share on Google Plus

0 comments: